கோவில் நிலத்தில் பொங்கல் வைக்க அனுமதி கேட்டு பெரிய மாரியம்மன் கோவில் முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டம்; பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் கைது


கோவில் நிலத்தில் பொங்கல் வைக்க அனுமதி கேட்டு பெரிய மாரியம்மன் கோவில் முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டம்; பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 2:48 AM IST (Updated: 1 April 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தில் பொங்கல் வைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவில் முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தில் பொங்கல் வைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவில் முன்பு தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
5001 தேங்காய் உடைக்கும் போராட்டம்
ஈரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த கோவிலின் பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதைத்தொடர்ந்து பெரிய மரியம்மன் கோவில் நிலத்தை மீட்டு பக்தர்கள் பொங்கல் வைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் நேற்று 5001 தேங்காய் உடைக்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
அதன்பேரில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நேற்று நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டனர். அங்கு தேங்காய் உடைக்கும் போராட்டத்துக்கான ஆயத்த நடவடிக்கைகள் நடந்தன. இதற்கு நில மீட்பு இயக்க தலைவர் இ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கைலாசபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராஜா, சண்முகசுந்தரம், சரவணன், சிவகாமி, புனிதம் அய்யப்பன், கார்த்தி, செல்வராஜ், மல்லிகா சுப்பிரமணியம், பா.ஜனதா மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் பி.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேங்காய் உடைக்கும் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்து இருந்தது. எனவே ஈஸ்வரன் கோவில் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆனந்தகுமார், சண்முகம் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
500-க்கும் மேற்பட்டவர்கள்
போராட்டத்தில் பங்கேற்க வந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் போராட்ட அமைப்பு நிர்வாகிகள் மஞ்சள் தடவிய தேங்காய் மற்றும் மஞ்சள் பை வழங்கினார்கள். தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபடும் வழி முறைகள் குறித்து விளக்கும் வகையில் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஈஸ்வரன் கோவிலின் உள் மண்டபத்தில் உட்கார வைக்கப்பட்டனர். அங்கு நிர்வாகிகள் போராட்டத்தின் தேவை குறித்து பேசினார்கள். பின்னர் அவர்கள் வெளியே வந்தபோது, போலீஸ் அதிகாரிகள் அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைக்க எந்த தடையும் இல்லை. ஆனால், யாரும் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு செல்லக்கூடாது. உங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நகரில் உள்ள பிற கோவில்களில் குழுக்களாக சென்று தேங்காய்களை உடைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்கள்.
சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்ட குழுவினருக்கும், போலீசாருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு குழுக்களாக சேர்ந்து ஆண்களும், பெண்களும் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று தேங்காய் உடைத்தனர். எல்லை மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில் என்று 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் சென்று தேங்காய் உடைத்தனர்.
எம்.எல்.ஏ. கைது
இதற்கிடையே மொடக்குறிச்சி தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. டாக்டர் சி.சரஸ்வதி தலைமையில் முன்னாள் எம்.பி. சவுந்தரம் மற்றும் சிலர் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வதாக உள்ளே சென்று விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் சிலர் அருகில் உள்ள பூக்கடை அருகே தயாராக வைத்திருந்த தேங்காய்களை எடுத்து வந்து கோஷங்கள் எழுப்பியபடி ரோட்டில் உடைக்க தொடங்கினார்கள். அப்போது அங்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து சென்று தேங்காய் உடைத்தவர்களை பிடித்து தேங்காய்களை கைப்பற்றி தடுத்தனர். மேலும் கோவிலின் முன்பு தேங்காய் உடைக்க முயன்ற மொடக்குறிச்சி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. டாக்டர் சி.சரஸ்வதி  உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
சிறிது நேரத்தில் இன்னும் சில பெண்களும் ஆண்களும், கோவில் முன்பு சாமி கும்பிட வருவது போன்று வந்து தேங்காய் உடைக்க முயன்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். மொத்தம் 7 பெண்கள் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டு வீரப்பன்சத்திரம் ஜனனி திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
பரபரப்பு
போராட்டக்குழுவினர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு இருந்து கலைந்து சென்ற பிறகும், சிலர் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு வந்து தேங்காய் உடைக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தினார்கள். கோவிலுக்கு வந்த அனைவரும் தேங்காய் ஏதேனும் எடுத்து வருகிறார்களா என்று சோதனை செய்தனர். பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே சென்று சிதறு தேங்காய் உடைக்கும் இடத்தில் மட்டுமே தேங்காய் உடைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். பக்தர்கள் அதன்படி கோவிலுக்குள் சென்று தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். ஆனால், போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தவர்கள் போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொள்ளாமல், சாலையில் சிதறு தேங்காய் உடைப்போம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே அவர்களிடம் இருந்து போலீசார் தேங்காய்களை பெற்றுக்கொண்டு, தேங்காய் உடைப்பதை தடுத்தனர். இதனால் கோவில் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜானகிராமன், கனகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆனந்தகுமார், சண்முகம், அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், ராஜகுமார், ஜெயசுதா, தெய்வராணி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகியோர் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

Next Story