ஈரோடு மாநகராட்சியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
ஈரோடு மாநகராட்சியில் தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார்கள் வருகின்றன. இதை தடுக்கும் வகையில் ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடை அமைப்பு, சுதா பல்துறை ஆஸ்பத்திரி இணைந்து தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையை தொடங்கி உள்ளன. இதன் தொடக்கமாக கடந்த ஒரு வாரத்தில் 2 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்த பணியினை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பழனிவேல், துணை இயக்குனர் பிரிசில்லா மணி உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்தனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு துணைத்தலைவரும், ஈரோடை அமைப்பு நிறுவனருமான டாக்டர் கே.சுதாகர் கூறியதாவது:-
வீதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் உள்பட எந்த ஒரு விலங்கும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு செயல்படுகிறது. அதே நேரம் தெருநாய்கள் பெருக்கத்தால் சமீபகாலமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. எனவே ஈரோடு மாநகராட்சியுடன் இணைந்து நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை சேவையை தொடங்கி இருக்கிறோம். இதற்காக ஈரோடு சோலாரில் நவீன வசதிகள் கொண்ட நாய்கள் கருத்தடை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இது செயல்படாமல் இருந்தது. இப்போது இது மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில் 100 நாய்களுக்கு கருத்தடை என்ற கணக்கில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. தெரு நாய்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் நாய்கள் பிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இவ்வாறு டாக்டர் கே.சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story