சேலத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு: முஸ்லிம் லீக்-தி.மு.க.வினர் மோதல்
சேலத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் லீக் கட்சியினர் மற்றும் தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சேலம்,
சாலை மறியல்
சேலம் மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட கோட்டையில் ஹபீப் தெரு, குண்டுபோடும் தெரு, பெருமாள் கோவில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் குடிநீர் குழாய் மற்றும் சாக்கடை கால்வாய் ஆகியவற்றை முதலில் அமைத்துவிட்டு அதன்பிறகு சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் (சுயேச்சை) சையத்மூசா மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஹபீப் தெருவில் சாலை அமைக்கும் பணிக்காக வந்தனர். அப்போது, இதுபற்றி தகவல் அறிந்த கவுன்சிலர் சையத்மூசா தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள், குடிநீர் குழாய் மற்றும் சாக்கடை கால்வாய் அமைத்துவிட்டு சாலை போடவேண்டும் என வலியுறுத்தி கோட்டை அரசு மகளிர் பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மோதல்
இது குறித்து தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடன்பாடு ஏற்படாததால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்க சென்றனர். மேலும், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வை கோட்டை பகுதிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு சிலர் கூறியதாக தெரிகிறது.
இதனால் அங்கிருந்த தி.மு.க.வினர் ஆவேசம் அடைந்து முஸ்லிம் லீக் கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவல் அறிந்த உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இந்த மோதல் சம்பவத்தின்போது, தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் தாக்கியதாக கூறி கவுன்சிலர் சையத்மூசா டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story