தொழிலக பாதுகாப்பு இயக்ககத்தின் பணித்திறனாய்வு கூட்டம்


தொழிலக பாதுகாப்பு இயக்ககத்தின் பணித்திறனாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 2:46 PM IST (Updated: 1 April 2022 2:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் அலுவலக கருத்தரங்கு கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் பணித்திறனாய்வு கூட்டம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமார் வரவேற்றார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கா.ஜெகதீசன் இயக்ககத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறினார்.

கூட்டத்தின் போது, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டத்தின் சலுகை, நிவாரணம் மற்றும் உதவிகள் கிடைக்கவும், நீண்ட காலமாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நீண்ட நேரமாக நின்று கொண்டு பணி செய்யும் சூழலில் அவ்வப்போது உட்கார்ந்து பணி செய்ய போதிய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு பாலமாக இருந்து வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு தமிழகம் முதலிடத்தை அடைய அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story