ஆண்டவன் உத்தரவு பெட்டியில் போகர் சித்தர் திருவுருவப்படம் வைத்து பூஜை
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் போகர் சித்தர் திருவுருவப்படம் வைத்து பூஜை
காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஸ்ரீ போகர் திருவுருவப்படம் வைத்து பூஜிக்கப்படுகிறது.
காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சுவாமியிடம் பூக்கேட்டு அதன்பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.
அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது நவீன வாகனங்களின் பெருக்கத்தால் சைக்கிளின் பயன்பாடு குறைந்து போனது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. மண் வைத்து பூஜிக்கப்பட்ட போது ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்து நிலத்தின் மதிப்பு பண் மடங்கு உயர்ந்தது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்ட போது சுனாமி ஏற்பட்டு வெள்ளத்தால் ஏராளமானோர் மடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருள் ஏதாவது ஒருவகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், குண்டுசாலை, குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த பொன் கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான ஸ்ரீ போகர் திருவுருவப்படம் நேற்று முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மார்ச் 21ந் தேதி முதல் இளவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.
Related Tags :
Next Story