சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம்


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 4:14 PM IST (Updated: 1 April 2022 4:14 PM IST)
t-max-icont-min-icon

ஆதம்பாக்கம், தாம்பரம், தண்டையார்பேட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ஆதம்பாக்கத்தில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது, சமையல் கியாஸ் சிலிண்டர், மொபெட் போன்றவற்றுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி பாடினர். அப்போது, தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான நாஞ்சில் பிரசாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

அதேபோல், வட சென்னை கிழக்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே பிரச்சினையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தாம்பரம் பஸ் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆனந்த், மாமன்ற உறுப்பினர் ஷகிலா ஜான்சி மேரி பிரின்ஸ், தேவசகாயம், பன்னீர்செல்வம், தாம்பரம் காந்தி பிரபாகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story