தூத்துக்குடியில் தேங்காய் நார் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.10 கோடி சேதம்


தூத்துக்குடியில் தேங்காய் நார் குடோனில்  பயங்கர தீ விபத்து: ரூ.10 கோடி சேதம்
x
தினத்தந்தி 1 April 2022 6:16 PM IST (Updated: 1 April 2022 6:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தேங்காய் நார் குடோனில் வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10கோடி சேதம் ஏற்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தேங்காய் நார் குடோனில் நேற்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன.
தேங்காய் நார் குடோன்
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் மடத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் (தேங்காய் தும்பு) குடோன் அமைந்து உள்ளது. இந்த குடோனில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தேங்காய் நார் சேகரித்து வைக்கப்படும். பின்னர் மொத்தமாக ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 
தற்போது அந்த குடோனில் சுமார் 3 ஆயிரம் டன் தேங்காய் நார் ஏற்றுமதி செய்வதற்கு தயாரான நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
திடீர் தீ 
நேற்று காலை 8 மணி அளவில் திடீரென அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் ஊழியர்கள் சென்று பார்த்தபோது, குடோனில் வைக்கப்பட்டு இருந்த தேங்காய் நார்களில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. 
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் முனியசாமி, தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதேபோன்று 2 தனியார் தீயணைப்பு வாகனமும் வந்தன. அந்த 5 தீயணைப்பு வாகனங்கள் மூலமும் தீயை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
ரூ.10 கோடி பொருட்கள் சேதம்
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அதாவது, காலை 8 மணிக்கு ெதாடங்கிய தீயை அணைக்கும் பணி மாலை 3.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. 
இந்த தீவிபத்தில் பெரும்பாலான தேங்காய் நார் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story