உடுமலையில் ஆலங்கட்டி மழை


உடுமலையில் ஆலங்கட்டி மழை
x
தினத்தந்தி 1 April 2022 2:16 PM GMT (Updated: 1 April 2022 2:16 PM GMT)

உடுமலையில் ஆலங்கட்டி மழை

உடுமலையில் ஆலங்கட்டி மழை பெய்தது. அந்த ஆலங்கட்டியை பொதுமக்கள் சேகரித்தனர்.
ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழை என்பது வானத்தில் இருந்து விழும் திடநிலைப்பொழிவாகும். பந்துகளாகவோ, ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி மழை என அழைக்கப்படுகிறது. இவை குறைந்தது 5 மி.மீ.விட்டம் இருக்கும். வானிலை அறிக்கைகளில் 5 மி.மீக்கு மேலுள்ளவை ஜிஆர்என்றும், சிறிய ஆலங்கட்டிகளும், பனிக்கற்களும் ஜிஎஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன. 
சூடான காற்று மேகங்களுடன் விரைவாக மேலெழுகையும், குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். அப்போதுதான் ஆலங்கட்டி உருவாகும். இவை அடிக்கடி வெப்ப மண்டலங்களில் உயர்ந்த உயரங்களில் ஏற்படுகின்றன.  அளவில் பெரிதான ஆலங்கட்டிகள் மிக விரைவாக கீழே விழுகின்றன. இவற்றின் விரைவு, உருகும் தன்மை, காற்றுடன் உரசல், மழையுடனான மற்றும் பிற ஆலங்கட்டிகளுடனான தாக்கம் ஆகியவற்றால் அவை கீழே விழும்போது அதன் அளவு குறைகிறது.
உடுமலை
அவ்வாறான ஆலங்கட்டி மழை உடுமலையில் நேற்று  பெய்தது. உடுமலையில் நேற்று பகலில் வெயில் கடுமையாக இருந்தது. மாலை  5 மணிக்கு வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. சிறிது நேரத்தில் கருமேகம் சூழ்ந்தது. இந்த நிலையில் 5.45 மணியளவில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது. அவை கீழே விழும்போது சத்தம் வந்தது. ஓட்டு வீடுகளின் மீது விழுந்தபோது சத்தம் அதிகமாக இருந்தது. ஆலங்கட்டி மழை பெய்ததை பொதுமக்கள் ஆவலுடன் பார்த்தனர்.
அவை கீழே விழுந்த ஓரிரு வினாடிகளில் கரைந்தது. சிலர் வீட்டை விட்டு வெளியே ரோட்டிற்கு வந்து ஆலங்கட்டிகளை எடுத்தனர். அப்போது அவர்கள் மீது ஆலங்கட்டிகள் விழுந்தன. இருப்பினும் அவர்கள் ஆலங்கட்டிகளை ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஓடி, ஓடிஎடுத்தனர். சிலர் கைகளை நீட்டி ஆலங்கட்டிகளை பிடித்தனர். ஆனால் அந்த ஆலங்கட்டிகள் கைகளில் எடுத்த ஓரிரு வினாடிகளில் கரைந்தது. இந்த மழை 15 நிமிடங்கள் மட்டுமே பெய்தது.

Next Story