மனைவி தீயில் கருகி சாவு: கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
மனைவி தீயில் கருகி இறந்த வழக்கில், கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி:
மனைவி தீயில் கருகி இறந்த வழக்கில், கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறியது.
மினிபஸ் கண்டக்டர்
தூத்துக்குடி சாந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுடலைமணி (வயது 33). மினிபஸ் கண்டக்டர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவருடைய மனைவி பார்வதி (32). சுடலைமணி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்தார். இதனால் பார்வதி மனம் உடைந்த காணப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 29.6.16 அன்று பார்வதி வீட்டில் தீயில் கருகிய நிலையில் கிடந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், சுடலைமணி, அவரது மனைவியை தற்கொலைக்கு தூண்டியது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் அலெக்ஸ் நிக்கோலஸ், குற்றம் சாட்டப்பட்ட சுடலைமணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சேவியர் ஞானபிரகாசம் ஆஜர் ஆனார்.
Related Tags :
Next Story