கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும்; ராகுல் காந்தி நம்பிக்கை


கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும்; ராகுல் காந்தி நம்பிக்கை
x
தினத்தந்தி 1 April 2022 9:18 PM IST (Updated: 1 April 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

2 நாள் சுற்றுப்பயணம்

  அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார்.
  முதல் நாளில் அவர் துமகூரு சித்தகங்கா மடத்திற்கு சென்று மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமியின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு பெங்களூரு திரும்பிய அவர் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ராகுல் காந்தி பேச்சு

  இந்த நிலையில் ராகுல் காந்தி நேற்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் அவர் பேசியதாவது:-

  கர்நாடக காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வேண்டும். 150 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். கர்நாடகம் காங்கிரஸ் தனி தன்மையை கொண்டுள்ளது. இது இயற்கையாகவே காங்கிரஸ் மாநிலம். நாம் குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் நிலவும் சரியான பிரச்சினைகளை முன்வைத்து நாம் போராட வேண்டும்.

முழு மெஜாரிட்டி

  கட்சி தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஒற்றுமையாக பணியாற்றி 150 தொகுதிகளில் கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கும்போது இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். அதே போல் கட்சியில் பதவிகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

  கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஏழைகள், சிறு வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் திட்டங்களை செயல்படுத்துவோம். சிறு மற்றம் தொழில்களை அழித்துவிட்டனர். அதனால் பா.ஜனதா புதிய வேலை வாய்ப்புகளை பெருக்கும் நிலையில் இல்லை.

மக்கள் சிரிப்பார்கள்

  ஊழல் ஒழிப்பு குறித்து பிரதமர் மோடி அடிக்கடி பேசுகிறார். ஆனால் அதுபற்றி அவர் கர்நாடகத்தில் பேசுவாரா?. அவ்வாறு பேசினால் மக்கள் சிரிப்பார்கள். கர்நாடகத்தில் உள்ள ஊழல் பா.ஜனதா அரசு, 40 சதவீத கமிஷன் பெறுகிறது. நாட்டிலேயே பா.ஜனதா அரசு தான் அதிக ஊழல் செய்யும் அரசாக உள்ளது.
  இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

  இந்த கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்பட முன்னணி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Next Story