பெங்களூரு மாநகராட்சியில் ரூ.10,480 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்


பெங்களூரு மாநகராட்சியில் ரூ.10,480 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 1 April 2022 9:27 PM IST (Updated: 1 April 2022 9:27 PM IST)
t-max-icont-min-icon

ரூ.10 ஆயிரத்து 480 கோடிக்கு 2022-23-ம் ஆண்டுக்கான பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

மாநகராட்சி பட்ஜெட்

  பெங்களூரு மாநகராட்சி மேயர், கவுன்சிலர்களின் பதவிக்காலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்து விட்டது. அதன் பிறகு மாநகராட்சி தேர்தல் நடைபெறாததால், தற்போது மாநகராட்சி நிர்வாக பணிகளை நிர்வாக அதிகாரி மேற்கொண்டு வருகிறார். வழக்கமாக கர்நாடக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

  அதன்படி இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்ய அதிகாரிகள் திட்டிமிட்டு இருந்தனர். ஆனால் பெங்களூரு நகர மந்திரிகளின் குறுக்கீடு காரணமாக பட்ஜெட் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் குறித்து ஒரு நாள் முன்னதாகவே அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.

திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை

  ஆனால் 2022-23-ம் ஆண்டுக்கான இந்த பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) நேற்று முன்தினம் இரவு திடீரென நகர வளர்ச்சித்துறை அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டு, உடனடியாக அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரத்து 480 கோடிக்கு திட்டங்கள் மற்றும் செலவுகள் இடம் பெற்றுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் மட்டுமே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

  மொத்த பட்ஜெட்டில் ஊழியர்களின் சம்பளத்திற்கு ரூ.1,234 கோடி, நிர்வாக செலவுகளுக்கு ரூ.313 கோடி, வங்கி கடன் அசல் மற்றும் வட்டி செலுத்த ரூ.122 கோடி, திட்ட செலவுகளுக்கு ரூ.456 கோடி, திட்ட பணிகள்-பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.3,148 கோடி, வளர்ச்சி பணிகளுக்கு ரூ.4,838 கோடி, வைப்புகளுக்கு ரூ.367 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உபரி பட்ஜெட்

  வரிகள் மற்றும் மேல் வரிகள் மூலம் ரூ.3,680 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ.2,302 கோடி, மத்திய அரசின் நிதி உதவி ரூ.436 கோடி, கர்நாடக அரசின் நிதி உதவி ரூ.3,576 கோடி, அசாதாரண வருவாய் ரூ.489 கோடி என மொத்தம் ரூ.10 ஆயிரத்து 484 கோடி வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரிகள் வருவாயை விட செலவுகள் குறைவாக இருப்பதால் இது உபரி பட்ஜெட்டாக அமைந்துள்ளது. அதாவது ரூ.4 கோடி உபரியாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மாநகராட்சி பட்ஜெட் ரகசியமாக தாக்கல் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்

பொதுவாக பெங்களூரு மாநகராட்சியில் ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் நிதித்துறை சிறப்பு கமிஷனர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். ஆனால் யாருமே எதிர்பாராத நிலையில் முன்கூட்டியே யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் நேற்று இரவு 11.30 மணியளவில் 2022-23-ம் ஆண்டுக்கான பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக கூறி அதுகுறித்து டிஜிட்டல் புத்தகத்தை மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தனர். நேற்று காலையில் பத்திரிகையாளர்கள் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ "வாட்ஸ்அப் குழு"வில் பட்ஜெட் புத்தகம் வெளியானதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

2021-22-ம் நிதி ஆண்டு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. அந்த நிதி ஆண்டின் கடைசி நாளில் கடைசி நேரத்தில் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். அதாவது நிதி ஆண்டு முடிவடைய 30 நிமிடங்கள் இருக்கும்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story