பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். கலெக்டர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை
திருப்பத்தூரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பான மாவட்ட சிறப்பு பணிக்குழுவின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க வெண்டும். பிளாஸ்டிக் கோப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவற்றை தயாரிப்பதற்கும், கொண்டு செல்வதற்கும், வினியோகம் மற்றும் உபயோகிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்படும்
மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை தீவிரமாக செயல்படுத்தும் விதமாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கும் பொருட்டு வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், பயன்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்க வேண்டும்.
அதற்கு மாற்றாக துணிப் பைகள், காகிதப்பைகள், மண்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள், சிறிய வணிக விற்பனையாளர்கள், மளிகை கடைகள், மருந்து கடைகள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற ஆதரவையும், பங்களிபையும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மஞ்சப்பை
முன்னதாக உயர் அலுவலர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா மஞ்சப்பை வழங்கி மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் பிரகாஷ், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட சிறப்பு பணிக்குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story