நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் மோசடி.வாலிபர் கைது
பள்ளிகொண்டா அருகே நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அணைக்கட்டு
பள்ளிகொண்டா அருகே நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தை எழுதி வாங்கினார்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த ராஜாபுரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சுதீர்குமார் (வயது 30). இவர் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூ.10 லட்சம் தேவைப்பட்டது. இது சம்பந்தமாக தேவி செட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பழனி மகன் இந்திரகுமார் (25) என்பவரிடம் 10 லட்சம் கடனாக கேட்டதாக தெரிகிறது. அதற்கு நிலத்தை கிரையம் செய்து கொடுத்தால் ரூ.10 லட்சம் தருவதாக கூறியிருக்கிறார்.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 6-ந் தேதி 2 ஏக்கர் 50 சென்ட் நிலத்தை இந்திரகுமார் பெயரில் பள்ளிகொண்டா பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுதிர்குமார் கிரையம் செய்து கொடுத்துள்ளார். பின்னர் மேலும் 2 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்தால்தான் ரூ.10 லட்சத்தை தருவேன் என இந்திரகுமார் கூறியுள்ளார். இதனால் டிசம்பர் மாதம் 30-ந் தேதி மீண்டும் 2 ஏக்கர் 37 சென்ட் நிலத்தை இந்திரகுமார் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
பத்திரப்பதிவு செய்ததும் இந்திரகுமார் இரண்டு நாள் கழித்து பணம் தருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இதுவரையில் பணத்தை தராததால் இது சம்பந்தமாக சுதீர்குமார் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நில அபகரிப்பு பிரிவு மற்றும் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் இந்திரகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாலிபர் கைது
இதேபோன்று இந்திரகுமார் மீது, ராஜாபுரத்தை சேர்ந்த விஜயன் மகன் துரைராஜ் (25) பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் குடும்பசெலவுக்காக இந்திரகுமாரிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றதாகவும், அதற்கு ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டி மோட்டார்சைக்கிளை எடுத்துச் சென்று விட்டதாக கூறி உள்ளார்.
அதன்பேரில் இந்திரகுமார் மீது 5 பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
Related Tags :
Next Story