ஓய்வு பெற்ற தொழிலாளர் காப்பீட்டு துணை இயக்குனரிடம் ரூ.2 லட்சம் மோசடி
நிலம் விற்பனை செய்வதாகக்கூறி ஓய்வுபெற்ற தொழிலாளர் காப்பீட்டு துணை இயக்குனரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அவரது மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
அணைக்கட்டு
நிலம் விற்பனை செய்வதாகக்கூறி ஓய்வுபெற்ற தொழிலாளர் காப்பீட்டு துணை இயக்குனரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அவரது மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
புகார் மனு
வேலூர் காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அரசுமணி. தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் பீமாராவ் கொலிந்தன் (வயது 43). இவர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ரூ.5 லட்சம் பெற்றார்
நான் காட்பாடி விருதம்பட்டு அம்பேத்கர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றேன். எனது தந்தை கடந்த 2016-ம் ஆண்டு சொந்தமாக நிலம் வாங்குவதற்காக பள்ளிகொண்டா கேமரான் பேட்டையை சேர்ந்த ராமதாஸ் என்பவரை அணுகி உள்ளார். அப்போது ராமதாஸ் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள நிலம் தனது அம்மா பெயரில் இருப்பதாகவும், அதை எனது தந்தைக்கு விற்பதாகக்கூறி ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.5 லட்சம் ஒப்பந்த தொகையாக பெற்றுக் கொண்டார்.
மேலும் ஒப்பந்தத்தின் போது நிலத்தின் பட்டா மற்றும் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து இருப்பதாகவும், நிலம் பதிவு செய்யும்போது அனைத்தும் எனது தந்தை பெயருக்கு எழுதி தருவதாகவும் கூறினார். தொடர்ந்து 6 மாதத்திற்கு மேலாகியும் அந்த இடத்தை ராமதாஸ் பட்டா மாற்றம் செய்யாமல் இழுத்தடித்து வந்தார். சந்தேகமடைந்த நாங்கள் இடத்தின் மீதான வில்லங்கம் சரி பார்த்தபோது அந்த இடம் ராமதாசின் அம்மா பெயரில் சொத்துக்கள் இருப்பதாக காட்டவில்லை.
மோசடி
மேலும் அவர் குறிப்பிட்ட இடம் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை பெயரில் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக ராமதாசை தொடர்பு கொண்டு கேட்டபோது வாங்கிய பணத்தை திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டார். தொடர்ந்து கடந்த 2019-ம் வருடம் ரூ. 2 லட்சம் திருப்பி கொடுத்தார். அதன்பின்பு போராடி ஒரு வருடம் கழித்து ரூ.1 ஒரு லட்சம் கொடுத்தார். பின்னர் மீதமுள்ள ரூ.2 லட்சத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையில் எனது தந்தை அரசுமணி இறந்துவிட்டார்.
தொடர்ந்து இது சம்பந்தமாக நாங்கள் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினோம். அதற்கு ராமதாஸ் மொத்த பணத்தையும் திருப்பித் தந்து விட்டதாக அவரது வக்கீல் மூலமாக பதில் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் தற்போது நாங்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தை நாடி உள்ளோம். மேலும் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை தனது அம்மா பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து எங்களை ஏமாற்றிய ராமதாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், மீதமுள்ள ரூ.2 லட்சத்தை பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
Related Tags :
Next Story