வாலிபரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை
வாலிபரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை
பல்லடம் அருகே ரூ.400 கடனை திருப்பி கேட்ட வாலிபரை கொலை செய்த நண்பர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
வாலிபர் கொலை
திருப்பூரை அடுத்த பல்லடம் வி.வடமலைபாளையம் கருடமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 22 அதே பகுதியை சேர்ந்தவர்கள் சுதாகரன் 22, விஜய் 24. இவர்கள் இருவரும் நண்பர்கள். நந்தகுமார் அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தார். அவரிடம் மது குடிப்பதற்காக சுதாகரன், விஜய் ஆகியோர் சேர்ந்து ரூ.400 கடன் வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நந்தகுமார், தனக்கு கொடுக்க வேண்டிய கடனை சுதாகரன், விஜய் ஆகியோரிடம் பொது இடத்தில் வைத்து திருப்பிக்கேட்டுள்ளார். இதில் சுதாகரன், விஜய் இருவரும் அவமானம் அடைந்தனர். இதனால் இருவரும் சேர்ந்து நந்தகுமாரை கொலை செய்ய திட்டமிட்டனர். கடந்த 12.1.2020 அன்று சுதாகரன், விஜய் இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் நந்தகுமார் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் கடனை திருப்பிக்கொடுப்பதாக கூறி நந்தகுமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து நந்தகுமாரை கல்லால் தாக்கியும், காலால் கழுத்தில் எட்டி உதைத்தும் சேர்ந்து கொலை செய்தனர்.
2 பேருக்கு ஆயுள் தண்டனை
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுதாகரன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி கொலை குற்றத்துக்காக சுதாகரன், விஜய் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்ற குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story