மயானத்திற்கு சாலை அமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிள்ளியூரில் மயானத்திற்கு சாலை அமைக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருக்கடையூர்:
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிள்ளியூர் ஊராட்சியில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் மயான சாலை ஆற்றங்கரையில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த சாலை மண் சாலையாக இருந்து வருகிறது. இதனால், இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் இந்த வழியாக இறந்தவர்களின் உடலை சுமந்து செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, மயானத்திற்கு செல்லும் இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்துத் தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த மண் சாலை, கப்பி சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், 6 மாதமாகியும் கப்பி சாலை முழுமையாக போடப்படாததை கண்டித்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கிள்ளியூர் கிராமமக்கள் மயான சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story