கடமலைக்குண்டு கிராமத்தில் காளியம்மன், முத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள காளியம்மன், முத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது.
கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள காளியம்மன், முத்தாலம்மன், பட்டாளம்மன், முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 24 சமுதாய மக்கள் இணைந்து பங்குனி திருவிழா நடத்துவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுப்பாடு தளர்வால் கடமலைக்குண்டு கிராமத்தில் கடந்த 30-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் காளியம்மன், முத்தாலம்மன், பட்டாளம்மன், முருகன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 30-ந்தேதி மற்றும் நேற்று முன்தினம் காளியம்மன், முத்தாலம்மனுக்கு அலகு குத்தியும், பால்குடம், தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல இளைஞர்கள் மாறுவேடம் போட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த 2 நாட்களும் ஒவ்வொரு சமுதாய பொதுமக்களும் தனித்தனியாக முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து காளியம்மன் கோவில் திடலில் வைத்தனர்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு காளியம்மன் கோவில் திடலில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கரட்டுப்பட்டி அருகே உள்ள தனியார் தோட்ட கிணற்றில் கரைத்தனர். நேற்று முருகன் கோவிலில் பொது மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதேபோல பட்டாளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு கரகாட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கடமலைக்குண்டு கிராம தலைவர் டி.கே.ஆர் கணேசன், செயலாளர் நல்லாசிரியர் கோவிந்தன், பொருளாளர் தங்கராஜ், கிராம பெரியதனம் பால்ராஜ் மற்றும் கடமலைக்குண்டு கிராம கமிட்டியினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story