நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ30 உயர்வு


நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ30  உயர்வு
x
தினத்தந்தி 1 April 2022 10:13 PM IST (Updated: 1 April 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ30 உயர்வு

திருப்பூர், ஏப்.2
நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.30 உயர்ந்துள்ளது. இதையடுத்து  பனியன் உற்பத்தியாளர்கள் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். 
நூல் விலை மேலும் ரூ.30 உயர்வு
பின்னலாடை துறையின் முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. பருத்தி பஞ்சு விலையேற்றம் காரணமாக கடந்த 18 மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது. மாதந்தோறும் நூல் விலை அதிகரிப்பால் புதிய ஆர்டர்களை எடுப்பதில் பின்னலாடை துறையினர் தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் பையர்களும் திணறி வருகிறார்கள். நூற்பாலை சங்கத்தினர் மாதந்தோறும் 1 ந் தேதி நூல் விலையை அறிவிப்பது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று நூல் விலை அறிவிப்பு பின்னலாடை துறையினருக்கு இடி தாக்கியதை போல் அமைந்தது. கிலோவுக்கு ரூ.30 நூல் விலை உயர்த்தப்பட்டது. அதாவது 20 கவுண்ட் கோம்டு வகை நூல் வரி நீங்கலாக கிலோ ரூ.362 க்கும், 24 கவுண்ட் ரூ.372க்கும், 30 கவுண்ட் ரூ.382க்கும், 34 கவுண்ட் ரூ.395க்கும், 40 கவுண்ட் ரூ.415க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பேரதிர்ச்சி
கடந்த 18 மாதங்களுக்கு முன்பு இருந்த நூல் விலை  2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத நூல் விலையேற்றத்தை கண்டித்து தொழில்துறையினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினாலும் கூட நூல் விலை குறைந்தபாடில்லை.
போட்டி நாடுகளை சமாளித்து பின்னலாடைத்துறை ஏற்றம் பெற நினைத்தாலும் நூல் விலை உயர்வு என்பது பின்னலாடை உற்பத்திக்கு பெரும் தடைக்கல்லாகவே அமைந்து வருகிறது. உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர்கள் வேலையிழப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பனியன் தொழில்துறையினர் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
ஆர்டர்களை செய்ய தயக்கம்
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:
நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. தொடர்ந்து நூல் விலை உயர்ந்து வருவதால் புதிய ஆர்டர்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பையர்களும் ஆர்டர்கள் கொடுக்க தயங்குகிறார்கள். பின்னலாடை துறையில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சு விலையேற்றத்தால் நூல் விலை உயர்கிறது என்கிறார்கள்.
மத்திய அரசு பருத்தி இறக்குமதிக்கான வரியை நீக்க வேண்டும். வெளிநாட்டுக்கு பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். நூல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். உள்நாட்டு தேவை போக மீதம் உள்ள பஞ்சை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட வரைமுறைகளை மத்திய அரசு கடைபிடித்து உள்நாட்டு பின்னலாடை தொழிலை காப்பாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதுகுறித்து அனைத்து தொழில்துறையினர் சேர்ந்து வருகிற 4 ந் தேதி மத்திய மந்திரியை சந்தித்து முறையிட உள்ளோம்.
வங்கிக்கடன்
பின்னலாடை துறையை பொறுத்தவரை திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகம் உள்ளன. 18 மாதங்களுக்கு முன்பு 1 கிலோ ரூ.200 என்று இருந்தது. தற்போது அந்த விலைக்கு ½ கிலோ நூலைத்தான் வாங்க முடியும். அனைத்து மூலப்பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆர்டர்கள் இருந்தும் அவற்றை செய்து கொடுக்க பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பின்னலாடையை இயக்குவதற்கு மத்திய அரசின் சார்பில் வட்டி சலுகையுடன் கடன் வழங்கப்பட்டது. அதுபோல் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கடன் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
உக்ரைன் நாட்டின் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்வதில் அசாதாரண நிலை தொடர்கிறது. இதுபோன்று ஒட்டுமொத்த நிலையை கருத்தில் கொண்டால் பின்னலாடை உற்பத்தி வர்த்தகம் பெரும் சுணக்கத்தை சந்தித்துள்ளது. எதிர்கால இலக்கை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னலாடை தொழில் பாதிப்பு
டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
கடந்த 18 மாதங்களில் ஒரு மாதத்தில் மட்டும் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது. மற்ற மாதங்களில் தொடர்ந்து விலையேற்றம் செய்யப்பட்டது. ரூ.30 லட்சம் கோடி இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தக இலக்கு அடைந்து விட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் பின்னலாடை தொழில் குறைந்து வருகிறது.
திருப்பூரை பொறுத்தவரை 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் பின்னலாடை உற்பத்திக்கு ஒவ்வொரு துறையையும் சார்ந்தே உள்ளனர். பஞ்சில் இருந்து நூல் தயாரித்து ஆடை உற்பத்தியாவது வரை பல்வேறு ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மூலமாக பின்னலாடைகள் உற்பத்தி நடக்கிறது.
டெல்லியில் உண்ணாவிரதம்
10 சதவீத நிறுவனங்கள் மட்டுமே பஞ்சில் இருந்து நூல் தயாரிப்பது முதல் ஆடை தயாரிப்பு வரை அனைத்தையும் ஒரே இடத்தில் செய்கிறார்கள். தற்போது நூல் விலை உயர்வு இருந்தாலும், இதுபோன்ற 10 சதவீத நிறுவனங்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும். மற்றவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. திருப்பூரில் 20க்கும் மேற்பட்ட பின்னலாடை அமைப்புகள் உள்ளன. ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் 25 பேர் வீதம் பங்கேற்றாலும் கூட மொத்தம் 500 பேர் டெல்லி சென்று பிரதமர், ஜவுளித்துறை மந்திரியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
பஞ்சை மூலப்பொருளாக கொண்டு செயல்படும் நூற்பாலைகள் முதல் பின்னலாடை நிறுவனங்கள் வரை அனைவரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் வகையில் திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் குறித்து ஒருங்கிணைந்து வருகிறோம். பஞ்சுக்கு உண்டான இறக்குமதி வரி 11 சதவீதத்தை குறைக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும். உள்நாட்டு தேவைக்கு போக மீதம் உள்ள நூலை ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. ஜவுளித்தொழிலை பாதுகாக்க நிரந்தர முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story