அரவக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
அரவக்குறிச்சி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அரவக்குறிச்சி,
பிளஸ்-2 மாணவி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்தவா் மாரிமுத்து. இவரது மனைவி பூங்கொடி. இவர்களுடைய மகள் புவனேஸ்வரி (வயது 17). இவர் பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாரிமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இதனால் புவனேஸ்வரி அப்பகுதியில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்தநிலையில் அதிகாலை 5 மணியில் இருந்து புவனேஸ்வரியை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் வீடு மற்றும் அக்கம், பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தற்கொலை
இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பெண் ஒருவர் காயத்துடன் பிணமாக கிடப்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தது வீட்டில் இருந்து காணாமல்போன புவனேஸ்வரி என்பதும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் பிணமாக கிடந்த புவனேஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story