தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 April 2022 10:55 PM IST (Updated: 1 April 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் பகுதி.

 விஷமிகள் கூடாரமாக மாறிய கட்டிடம்

வேலூர் ரங்காபுரம் அருகே மூலக்கொல்லை பகுதியில் குறு வட்ட அளவர் குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டிடம் பயனற்ற நிலையில் உள்ளது. கண்ணாடிகள், கதவுகள் உடைக்கப்பட்டு பாழடைந்து கிடக்கும் இந்தக் கட்டிடத்தை இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களுக்கு விஷமிகள் பயன்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கட்டிடத்தைப் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

  -மோகன்பாபு, ரங்காபுரம் வேலூர்.

பழுதான மின்கம்பங்கள்

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பையூர் காலனியில் பழுதடைந்து மிக ஆபத்தான நிலையில் 2 மின் கம்பங்கள் உள்ளன. அதனை மாற்றி அமைக்க வேண்டும் எனப் பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான மின் கம்பங்களை மாற்றி விட்டு புதிய கம்பங்கள் நட வேண்டும்.
  -ச.சசிகுமார், ைபயூர்.

கழிவறை கதவுகள் சேதம்

  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பஸ் நிலையத்தில் பெண்கள் கட்டண கழிவறை உள்ளது. அதன் கதவுகள் சரியான பராமரிப்பு இல்லாததால் சேதம் அடைந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து சேதம் அடைந்த கதவுகளை சீரமைத்துத்தர ேவண்டும்.
  -ராணி, வாலாஜா.

கழிவுநீர்கால்வாயை தூர் வார வேண்டும்

  வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியம் வேப்பூர் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் கால்வாய் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -உதயகுமார், வேப்பூர்.

நடுத்தெருவில் மின்கம்பம்

  கே‌.வி.குப்பத்தை அடுத்த பில்லாந்திபட்டு பகுதியில் உள்ள பழைய பஞ்சாயத்து அலுவலகத் தெருவின் நடுவே மின்கம்பம் உள்ளது. இது பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இந்த மின் கம்பத்தை மாற்றி தெருவின் ஓரமாக அமைப்பதற்கு மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -கோபாலகிருஷ்ணன், பில்லாந்திபட்டு.
செயல்படாத நீரேற்றும் நிலையம்

  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் திரவுபதியம்மன் கோவில் தெருவில் தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட நீரேற்றும் நிலையம் உள்ளது. இந்த நிலையம், 6 மாதமாக செயல்படவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நீரேற்றும் நிலையத்தைச் செயல்பட வைக்க வேண்டும்.
  -டி.பூவரசன், கீழ்பென்னாத்தூர்.

சாலையை சீர் செய்வார்களா?

  ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை-பெங்களூரு சாலையில் புளியந்தாங்கல் ஏரிக்கரை மற்றும் சீக்கராஜபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகில் சாலை மிக மோசமாக உள்ளது. சாலையில் ஊற்றிய தார், லேயர் லேயராக பெயர்ந்து காணப்படுகிறது. வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகிறார்கள். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் புதிதாக தார் ஊற்றி சீரமைக்க வேண்டும்.
  -திருமால், புளியந்தாங்கல்.

  திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் இணைப்பு சாலை முதல் காக்கங்கரை ரெயில் நிலையம் வரை நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக இருந்த இடங்களில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டு மாதக்கணக்கில் ஆகிறது. ஆனால் இதுவரை தார் ஊற்றவில்லை. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும்.
  -கே.காளிமூர்த்தி, செவ்வாத்தூர்.

ஆபத்தான இரும்புத்தடுப்பு

  வேலூர் சி.எம்.சி. அவுட்ேகட் பகுதியில் காட்பாடி சாலை நடுவே இரும்புத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகனம் ஒன்று மோதியதில் இரும்புத்தடுப்பு சேதம் அடைந்தது. அந்த இரும்புத்தடுப்பில் இருந்த கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. இரவில் வாகனங்களில் செல்பவர்கள் கம்பிகளை ஒட்டியவாறு ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு இரும்புத்தடுப்பு கம்பிகளை சரி செய்ய வேண்டும்.
  -மாலவன், வேலூர்.
  


Next Story