உக்கடை-கமலாபுரம் இணைப்பு சாலையில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும்
உக்கடை-கமலாபுரம் இணைப்பு சாலையில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
உக்கடை-கமலாபுரம் இணைப்பு சாலையில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணைப்பு சாலை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலப்பனையூர் ஊராட்சியில் உக்கடை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உக்கடை கிராமத்திலிருந்து கமலாபுரம் பஸ் நிறுத்தம் வரை உள்ள இணைப்பு சாலையில் ரெங்கநாதபுரம் வடிகாலில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கமலாபுரம், மேலப்பனையூர், ரெங்கநாதபுரம், செல்லத்தூர் ஆகிய கிராம மக்கள் விவசாய பணிகளுக்காக இந்த பாலத்தின் வழியே சென்று வந்தனர். தற்போது இந்த பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் உள்ளிட்டவை செல்லமுடியாமல் உள்ளது. இதனால் விவசாயிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலை
கமலாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து உக்கடை கிராமம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியே விவசாய பணிகளுக்கான வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உக்கடை கிராமத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய பாலம் கட்டித்தர வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த உக்கடை-கமலாபுரம் இணைப்பு சாலையில் உள்ள பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும். மேலும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story