நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
நாமக்கல்:
நாமக்கல் முல்லை நகரில் வசித்து வந்தவர் ரமேஷ் குமார் (வயது 30). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கடந்த மாதம் 21-ந் தேதி நாமக்கல் கணேசபுரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அந்த சமயம் அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் செயின்கள், மோதிரம் என 9¾ பவுன் நகைகளை திருடி சென்றனர். மேலும் மடிக்கணினி மற்றும் செல்போனும் திருடு போயிருந்தது.
இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பெயிண்டர்களான நாமக்கல் டவுன் கணேசபுரத்தை சேர்ந்த பிரவீன் பாண்டியன் (21), ராமாபுரம்புதூரை சேர்ந்த சரவணன் என்கிற கேடி சரவணன் (25), எட்டையாம்பட்டியை சேர்ந்த அரவிந்த் குமார் (19), வளையப்பட்டியை சேர்ந்த தேவரூபன் (34) ஆகியோர் ரமேஷ் குமார் வீட்டில் நகைகள் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் 4 பேரும் முல்லை நகரில் உள்ள மற்றொரு சாப்ட்வேர் என்ஜீனியர் விஜயகுமாரின் (32) வீட்டிலும் நகைகள், செல்போன் மற்றும் கேமரா ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. மேலும் பிரவீன் பாண்டியன் மற்றும் சரவணன் ஆகியோர் நாமக்கல் சாவடி தெருவில் உள்ள ராமதேவ கோவில் உண்டியலை உடைத்து திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து நகைகள், மடிக்கணினிகள், கேமரா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் திருட்டுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story