அரூர் அருகே 8 மாத கர்ப்பிணி மர்ம சாவு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்


அரூர் அருகே 8 மாத கர்ப்பிணி மர்ம சாவு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 11:50 PM IST (Updated: 1 April 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே கர்ப்பிணி மர்ம சாவு குறித்து கணவர் குடும்பத்தினரிடம் உரிய விசாரணை நடத்த கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூர்:
அரூர் அருகே கர்ப்பிணி மர்ம சாவு குறித்து கணவர் குடும்பத்தினரிடம் உரிய விசாரணை நடத்த கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கர்ப்பிணி மர்மசாவு
தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவருடைய மனைவி சோனியா (வயது 20). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த சோனியா கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அரூர் போலீசார் சோனியாவின் உடலை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். 
இந்நிலையில், சோனியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று திரண்டனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அப்போது சோனியாவின் மரணம் குறித்து அவருடைய கணவர் குடும்பத்தினரிடம் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அவர்களிடம் அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து சோனியாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரூர் கச்சேரி மேடு பகுதியில் திரண்டு மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த நிலையில் சோனியா மர்ம சாவு குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி ஒரு ஆண்டு மட்டுமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து அரூர் உதவி கலெக்டர் முத்தையன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story