மதுரை-தேனி இடையே அகலப்பாதையில் 85 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்க அனுமதி
மதுரை-தேனி இடையே அகலப்பாதையில் 85 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை-தேனி இடையே அகலப்பாதையில் 85 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நிதி
மதுரையில் இருந்து போடி வரையிலான மீட்டர்கேஜ் ரெயில்பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் இந்த பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பணிகள் மதுரை- உசிலம்பட்டி, உசிலம்பட்டி-ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி-தேனி, தேனி-போடி என 4 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில், மதுரை-தேனி வரையிலான பணிகள் முடிந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வுக்காக காத்திருந்தது. இந்த நிலையில், ஆண்டிபட்டி-தேனி இடையேயான 17 கி.மீ. ரெயில் பாதையை மத்திய ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோஜ் அரோரா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு அம்சங்கள்
இதற்காக மோட்டார் டிராலி மூலமும், பின்னர் என்ஜின் மூலம் 120 கி.மீ. வேகத்திலும் சோதனை நடத்தினார். இந்த ஆய்வின் போது, தென்னக ரெயில்வே கட்டுமானப்பிரிவு தலைமை என்ஜினீயர் இளம்பூரணன், கோட்ட மேலாளர் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதனை தொடர்ந்து, ஆண்டிபட்டி-தேனி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகலப்பாதையானது இந்திய ரெயில்வே சட்டம் 1989, பிரிவு 22 (1)-ன் படி பாதுகாப்பு அம்சங்களை கொண்டு ரெயில்கள் இயக்க தகுதி வாய்ந்ததாக உள்ளது.
எனவே, இந்த பாதையில், மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கலாம் என்றும், ரெயில் நிலையங்களில் ரெயில் செல்லும்போது மட்டும் 15 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்க வேண்டும் என்றும் சான்று அளித்து உள்ளார்.
கடிதம்
இந்த சான்றிதழின் அடிப்படையில், மதுரை கோட்ட மேலாளர் அலுவலகம் ரெயில்வே வாரியத்துக்கு மதுரை- தேனி இடையே ரெயில்கள் இயக்க பரிந்துரைக்கும்படி, தென்னக ரெயில்வே பொதுமேலாளர் அலுவலகத்துக்கு நேற்று கடிதம் அனுப்பி உள்ளது.
ஏற்கனவே, மதுரை- ஆண்டிபட்டி இடையே பாதுகாப்பு கமிஷனரின் ஒப்புதல் கிடைத்ததால், நேற்று முதல் இந்த பாதையில் ரெயில்கள் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், தற்காலிகமாக இந்த அறிவிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது தேனி வரை ஒப்புதல் கிடைத்து உள்ளதால், மதுரையில் இருந்து தேனிக்கு இந்த மாதத்துக்குள் ரெயில் இயக்கப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story