ஜோலார்பேட்டை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்


ஜோலார்பேட்டை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்
x
தினத்தந்தி 2 April 2022 12:01 AM IST (Updated: 2 April 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. அப்போது வீட்டில் ஆட்கள் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. அப்போது வீட்டில் ஆட்கள் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

சிலிண்டர் வெடித்தது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சிக்குட்பட்ட பூக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 65). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது பேரன் கோகுல் மட்டும் வீட்டில் இருந்தார். இரவு நேரத்தில் தனியாக படுப்பதற்கு பயந்து அருகில் உள்ள நண்பர் வீட்டில் கோகுல் தங்கி உள்ளார்.

வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு கோகுல் தனது பாட்டியின் வீட்டை பூட்டிக் கொண்டு அருகில் உள்ள நண்பர் வீட்டில் தூங்குவதற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை 6 மணியளவில் கலா வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து  தரைமட்டமானது. வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் அரசு ஆவணங்கள், பீரோ உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்தது.

உயிர்ச்சேதம் தவிர்ப்பு

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சிலிண்டரில் பாதி அளவு மட்டும் கியாஸ் இருந்ததால் அருகில் உள்ள வீடுகளில் சேதம் ஏற்படவில்லை.  சிலிண்டர் வெடித்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. 

இது குறித்து தகவலறிந்ததும் அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். 

Next Story