தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 April 2022 12:01 AM IST (Updated: 2 April 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


சரிசெய்யப்படாத மின்மோட்டார்
புதுக்கோட்டை மாவட்டம்,  சம்பட்டிவிடுதி பஞ்சாயத்து, மேலவிடுதி கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
ஜெயக்குமார், மேலவிடுதி, புதுக்கோட்டை.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி பொன்னகர் 3-வது வீதியில் உள்ள செல்வவிநாயகர் கோவில் அருகே 2 மின்கம்பங்கள் உள்ளன. அவற்றில் உள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரியாததால் அப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, 2  மின்கம்பங்களிலும் புதிய மின் விளக்கு அமைத்து சரி செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும்,  நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், பொன்நகர், திருச்சி.

ஆமை வேகத்தில் நடைபெறும் நடைபாதை பணி
கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில்  நிலையத்திற்கு தினசரி 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த ரெயில் நிலையம் வழியாக பயணம் செய்கின்றனர்.  இந்த நிலையில் 2-வது நடைமேடையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இன்று வரை முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் 2-வது நடைமேடையில் நிற்கும்போது, பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேட்டுக்கொள்கிறோம். 
சுந்தர், குளித்தலை, கரூர். 

ஆம்புலன்ஸ் டிரைவர் நியமிக்கப்படுவாரா? 
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், வடசேரி பஞ்சாயத்து, காவல்காரன்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவு நேரத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்பட்டாலோ, கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டாலோ உடனடியாக ஆம்புலன்ஸ் வர வாய்ப்பு இல்லாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நிஷாந்த், காவல்காரன்பட்டி, கரூர். 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மண்ணச்சநல்லூர்  கூத்தூர் ஊராட்சி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக இப்பகுதியில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலசுப்ரமணியம், கூத்தூர், திருச்சி.

சுகாதாரமற்ற பொதுக்கழிவறை 
திருச்சி மாவட்டம், துறையூர் பஸ் நிலையத்தில் பயணிகள் இயற்கை உபாதைகள் கழிக்க பொதுக்கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கழிவறை பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசுவதுடன் அதிலுள்ள தண்ணீர் குழாய்கள் உள்பட அனைத்து பொருட்களும் சேதமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இவற்றை பொதுமக்கள் பயன்படுத்த  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பொதுக்கழிவறையை பராமரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், துறையூர், திருச்சி.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால் 
திருச்சி செல்வநகர் 2-வது வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், தூர்வாரப்படாததாலும் தற்போது தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செல்வநகர், திருச்சி.

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் மண்
திருச்சி கே.கே.நகர்- உடையான்பட்டி சாலையோரத்தில் அதிக அளவில் மணல் குவிந்து உள்ளன. இந்த நிலையில் சாலையின் குறுக்கே நாய்கள் ஓடும்போதும், கால்நடைகள் வரும்போதும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் திடீரென பிரேக் போடும் போது மண் இழுத்துவிட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கே.கே.நகர், திருச்சி.

Next Story