50 ரூபாயை எடுத்து ஆசிரியையிடம் ஒப்படைத்த 6 வயது சிறுமிக்கு கிடைத்த கவுரவம்


50 ரூபாயை எடுத்து ஆசிரியையிடம் ஒப்படைத்த 6 வயது சிறுமிக்கு கிடைத்த கவுரவம்
x
தினத்தந்தி 2 April 2022 12:17 AM IST (Updated: 2 April 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே வகுப்பறையில் கிடந்த 50 ரூபாயை எடுத்து ஆசிரியையிடம் கொடுத்ததால் 1-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு கவுரவம் தேடிவந்தது. ஒருநாள் முழுவதும் தலைமை ஆசிரியை இருக்கையை அவள் அலங்கரித்தாள்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே வகுப்பறையில் கிடந்த 50 ரூபாயை எடுத்து ஆசிரியையிடம் கொடுத்ததால் 1-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு கவுரவம் தேடிவந்தது. ஒருநாள் முழுவதும் தலைமை ஆசிரியை இருக்கையை அவள் அலங்கரித்தாள்.

கவுரவம்

இன்றைய குழந்தைகள். நாளைய இந்தியாவின் தூண்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. வீட்டில் குழந்தைகள் இருப்பதை காட்டிலும் பள்ளிக்கூடங்களில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் தான் குழந்தைகளின் வளர்ப்பு பெற்றோராக அவர்களை கண்காணித்து வருகிறார்கள். 
கல்வி கற்பதோடு, நல்ல ஒழுக்கத்தையும் ஆசிரியர்கள் கற்பித்து கொடுக்கிறார்கள். நல்ல சமூகம் அமைவதற்கு ஆசிரியர்களின் பங்கு அபரிமிதமானது. அதற்கு மானாமதுரை அருகே நடந்த இந்த நிகழ்வு, ஒரு எடுத்துக்காட்டாகி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

பணத்தை எடுத்து கொடுத்த மாணவி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பர்மா காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று வழக்கம் போல 1-ம் வகுப்பு மாணவி தீபா வந்திருந்தாள். வகுப்பறைக்கு சென்ற போது அங்கு 50 ரூபாய் நோட்டு கீழே கிடந்துள்ளது. அதை பார்த்த சிறுமி, எடுத்து வைத்து கொண்டு, பின்னர் ஆசிரியை ராமலட்சுமி வகுப்பறைக்கு வந்தவுடன், அந்த 50 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தாள். அப்போதுதான் ஆசிரியைக்கு, அதற்கு முந்தைய நாள் தன் 50 ரூபாயை தவறவிட்டது பற்றி ஞாபகம் வந்தது.
உடனே சிறுமி தீபா பிரபாவின் நேர்மையை பாராட்டி ஆசிரியை கைகுலுக்கினார். மற்ற மாணவ-மாணவிகளையும் கைதட்ட சொல்லி அவளை ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு மாணவியை தலைமை ஆசிரியர் ஞானசேகரிடம் அழைத்துச் சென்று, மாணவியின் செயலை கூறி உள்ளார்.

தலைமை ஆசிரியரானாள்

இதனால் வியந்த தலைமை ஆசிரியர் ஞானசேகர், மாணவியை கவுரவிக்க முடிவு செய்தார். 6 வயது சிறுமியின் நேர்மை மற்ற மாணவ-மாணவிகளுக்கும் ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும் என நினைத்தார். உடனே சிறுமி தீபா பிரபாவை தலைமை ஆசிரியர் தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். ஒருநாள் முழுவதும் தலைமை ஆசிரியராக இருக்கும்படி அந்த மாணவியிடம் எடுத்துக்கூறி கவுரவப்படுத்தினார். நேற்று பணி நேரம் முடியும் வரை சிறுமி, தலைமை ஆசிரியர் இருக்கையை அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story