27¼ கிலோ நகையை தங்கக்கட்டிகளாக்கி முதலீடு செய்யும் திட்டம்


27¼ கிலோ நகையை தங்கக்கட்டிகளாக்கி முதலீடு செய்யும் திட்டம்
x
தினத்தந்தி 2 April 2022 12:29 AM IST (Updated: 2 April 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடி கோவிலுக்கான பயன்படுத்த இயலாத 27¼ கிலோ நகையை தங்கக்கட்டிகளாக்கி வங்கியில் முதலீடு செய்யும் திட்ட விழாவில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சேகர்பாபு பங்கேற்று வங்கி நிர்வாகத்திடம் அந்த நகைகளை ஒப்படைத்தனர்.

சாத்தூர், 
இருக்கன்குடி கோவிலுக்கான பயன்படுத்த இயலாத 27¼ கிலோ நகையை தங்கக்கட்டிகளாக்கி வங்கியில் முதலீடு செய்யும் திட்ட விழாவில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சேகர்பாபு பங்கேற்று வங்கி நிர்வாகத்திடம் அந்த நகைகளை ஒப்படைத்தனர்.
இருக்கன்குடி கோவில் நகைகள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள 27 கிலோ 236 கிராம் தங்க நகையை சுத்த தங்க கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியில் 5 ஆண்டுக்கான முதலீடாக செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கான நிகழ்ச்சி இருக்கன்குடி கோவிலில், ஓய்வுபெற்ற நீதிபதி மாலா தலைமையில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி முன்னிலை வகித்தார். 
வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர், கோவில் நிர்வாகத்திடம் பெறப்பட்ட தங்க நகைகளை சாத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முதன்ைம மேலாளரிடம் ஒப்படைத்தனர். 
பூமி பூஜை 
இதை தொடர்ந்து கோவிலின் வடக்கு பரிகார மண்டபத்தினை ரூ.42½ லட்சம் மதிப்பில் கான்கீரீட் மண்டபமாக நீட்டித்து கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். 
கோவில் வளாகத்தில் ரூ.3.48 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட நூலக கட்டிடத்தையும் திறந்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து, கலைஞரின் தல மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ், கோவிலின் தல விருட்சமாக மூன்று மூவிலை வில்வ மரக்கன்றுகளை நட்டனர். ரூ.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறும் போது, “இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மேலும்  மாரியம்மன் கோவிலில் பாலம், சுற்றுச்சுவர், கடைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், திருப்பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. தி.மு.க. ஆட்சியில்தான் பக்தர்களின் கோரிக்கைகள் அதிகம் நிறைவேற்றப்படுகிறது” என்றார். 
 ரூ.40 கோடிக்கும் மேலான பணிகள்
அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:- 
106 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணி விரைவில் தொடங்க உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எந்தெந்த கோவில்களில் திருப்பணி நடைபெற்றது, எந்த கோவிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது, எவ்வளவு மதிப்பில் நடைபெற்று வருகிறது என்பதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.40 கோடிக்கும் மேலான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 
மேலும் அமைச்சர்கள் கூறும் போது, இருக்கன்குடி கோவிலுக்கு சொந்தமான 27 கிலோ 236 கிராம் நகைகளை தங்கக்கட்டிகளாக்கி, 5 ஆண்டுக்கு முதலீடு செய்வதன் மூலம் மாதம்தோறும் ரூ.2 லட்சம் வீதம் வட்டியாக ஆண்டுக்கு ரூ.24 லட்சம் கிடைக்கப்பெறும். இந்த வட்டித் தொகை கோவிலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு கோவில் திருப்பணி மற்றும் கோவில் சார்ந்த இதர பணிகளுக்கு பயன்படுத்தப்படும்” என கூறினர்.
எம்.எல்.ஏ.க்கள்
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், ரகுராமன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, இணை இயக்குனர் பாஸ்கரன், இருக்கன்குடி கோவில் செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் சீதாலட்சுமி மற்றும் சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், இருக்கன்குடி ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story