சொத்து தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை செய்த தம்பி கைது


சொத்து தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை செய்த தம்பி கைது
x
தினத்தந்தி 2 April 2022 12:59 AM IST (Updated: 2 April 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடி, 
விவசாயி
ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 36), விவசாயி. இவருடைய மனைவி கவுதமி (34). இவர்களுக்கு விஸ்வமூர்த்தி (7), ஈஸ்வர மூர்த்தி (3), விஷ்ணுபிரியா (5) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி இரவு சுந்தரமூர்த்தி தனது வீட்டின் அருகே தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி இன்ஸ்பெக்டர் ஆழகம்மை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
சொத்து தகராறு
இதில் சொத்து தகராறு காரணமாக சுந்தர மூர்த்தியை அவரது தம்பி ராமமூர்த்தி அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட சுந்தரமூர்த்திக்கு ராமமூர்த்தி (31), லட்சுமண மூர்த்தி (31) ஆகிய தம்பிகளும், சுந்தரஜோதி (34) என்ற தங்கையும் உள்ளனர். இந்தநிலையில் அண்ணன்-தம்பிகள் இடையே சொத்து பிரச்சினை இருந்து உள்ளது.
இதன்காரணமாக சுந்தரமூர்த்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அருகே தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த 30-ந் தேதி இரவு சுந்தரமூர்த்திக்கும், ராமமூர்த்திக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தி தான் கையில் வைத்திருந்த அரிவாளால் சுந்தரமூர்த்தியின் தலையில் வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். 
சிறையில் அடைப்பு
இதையடுத்து, ராமமூர்த்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இரவு நேரம் என்பதால் கொலை செய்யப்பட்டது யாருக்கும் தெரியவில்லை. மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து ராமமூர்த்தியை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story