அரசு ஊழியர் வீட்டில் 36¼ பவுன் நகை-பணம் கொள்ளை
அரசு ஊழியர் வீட்டில் 36¼ பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
இளநிலை உதவியாளர்
பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 57). இவருக்கு லோகாம்பாள் என்ற மனைவியும், அன்பரசி, மங்கையர்கரசி ஆகிய 2 மகள்களும், வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியன் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். மகள்கள் 2 பேரையும் அம்மாபாளையத்திலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
மகனுக்கு திருமணமாகி கோவையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் ஒரே வீட்டில் சுப்பிரமணியன் தனது மனைவி மற்றும் தனது தந்தையான பள்ளி இரவு நேர காவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற நாராயணன்(82) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கதவின் பூட்டை உடைத்து...
இந்நிலையில் சுப்பிரமணியன் செஞ்சேரி- செட்டிகுளம் சாலையில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 10 நாட்களாக மனைவியுடன் அங்கேயே தங்கியுள்ளார். இதனால் அம்மாபாளையத்தில் உள்ள வீட்டில் முன்பக்க அறையில் நாராயணன் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் மங்கையர்கரசி தனது தாத்தாவுக்கு உணவு கொண்டு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக தனது தந்தை சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த சுப்பிரமணியன் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார்.
நகை- பணம் கொள்ளை
அப்போது ஒரு அறையில் பீரோக்களில் வைத்திருந்த மொத்தம் 36¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் திருட்டு போயிருந்தது ெதரியவந்தது. இது குறித்து அவர், பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது சுப்பிரமணியன் வீட்டில் கொள்ளையடித்த நகைகள் இருந்த பெட்டிகளை, அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலில் மர்மநபர்கள் வீசிவிட்டு தப்பி சென்றிருந்தது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. வீட்டில் முதியவர் தனியாக இருப்பதை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story