ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்-அமைச்சர் கீதாஜீவன் பேட்டி


ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்-அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
x
தினத்தந்தி 2 April 2022 1:47 AM IST (Updated: 2 April 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த சேவை மையத்தை தொடர்பு கொண்டு பெண்கள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அமைச்சர் கீதாஜீவன் தென்காசியில் கூறினார்.

தென்காசி:
ஒருங்கிணைந்த சேவை மையத்தை தொடர்பு கொண்டு பெண்கள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அமைச்சர் கீதாஜீவன் தென்காசியில் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தென்காசி மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார்.

அவர் தென்காசி அருகே மேலகரம் எழில்நகரில் இயங்கிவரும் `தி லைப் பிளஸ்ஸிங் சேஞ்ச் மிஷன்' குழந்தைகள் இல்லம், குடியிருப்பில் உள்ள சகி ஒருங்கிணைந்த சேவை மையம், குற்றாலம் - ஐந்தருவி சாலையிலுள்ள ஓம் பிரணவ ஆசிரம குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லம் ஆகியவற்றில் ஆய்வு நடத்தினார்.

பேட்டி

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் இயங்கும் அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம், ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தேன்.

தென்காசி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் `சகி ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற பெண்களுக்கான ஒருங்கிணைந்த ஆதரவு மற்றும் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் அளவில் செயல்படுகிறது.

துரித நடவடிக்கை 

இந்த மையம் தொடங்கப்பட்டு மூன்று மாதம் ஆகிறது. இதுவரை 85 அழைப்புகள் வந்துள்ளன. அந்த அழைப்புகளில் கூறப்பட்ட விஷயங்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிலர் ஆறுதலுக்காக அழைக்கிறார்கள். சிலருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது. சிலருக்கு வழக்கறிஞர் உதவி தேவைப்படுகிறது.

இது போன்றவற்றை இந்த மையத்தில் இருப்பவர்கள் தீர்த்து வைக்கிறார்கள். மிகுந்த பிரச்சினையோடு வருபவர்கள் 5 நாட்கள் இங்கு தங்கி இருந்து திரும்பி செல்லும்போது பிரச்சினை இல்லாமல் அவர்கள் வீடுகளுக்கு செல்லும் அளவிற்கு இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அறிமுகம்

எனவே பெண்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து 181 என்ற எண்ணை அழைத்து கூறினால் உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தென்காசி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண்களின் விழிப்புணர்வுக்காக மையத்தின் தொலைபேசி எண்ணை அமைச்சர் கீதாஜீவன் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ., மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவி வேணி, துணைத் தலைவர் ஜீவானந்தம், கவுன்சிலர் நாகராஜ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, மேலகரம் தி.மு.க. செயலாளர் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சங்கரன்கோவில் புதுமனை 3-ம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்வதற்காக சென்றார். அப்போது குழந்தைகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நீர் மோர் பந்தலையும் அவர் திறந்து வைத்தார்.

Next Story