அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு கேட்டு விண்ணப்பிக்கலாம் தகுதி உள்ளவர்களுக்கு கலெக்டர் அழைப்பு
சேலம் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், தகுதி உள்ளவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு கோரி விண்ணப்பிக்கலாம் எனவும், தகுதி உள்ளவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுக்குமாடி குடியிருப்புகள்
சேலம், சேலம் மேற்கு, வாழப்பாடி, எடப்பாடி தாலுகாக்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்ய வருகிற 11, 12-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தாரின் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
பயனாளிகளுக்கு ஒதுக்கீடு
இக்குடியிருப்புக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்ட பயனாளி பங்கீட்டு தொகையான அந்தந்த திட்டப்பகுதிக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் முதல் 1.30 லட்சம் வரை வாரியத்திற்கு முன் பணமாக செலுத்த வேண்டும். மேலும், குடும்பத்தினருக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும், அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விட மாட்டேன் என்ற உறுதிமொழி படிவமும் சமர்ப்பிக்க வேண்டும்.
வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் 144 வீடுகள், எடப்பாடி பகுதியில் 352 வீடுகள், நரசோதிப்பட்டி அவ்வை நகர் பகுதியில் 336 வீடுகள், சேலத்தாம்பட்டி பகுதியில் 496 வீடுகள் (அனைத்து வகுப்பினரும்) மற்றும் மணக்காடு திடீர் நகர் பகுதியில் 636 வீடுகள் (ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு மட்டும்) பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
மனு அளிக்கலாம்
எனவே முகாம் நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய ஆவணங்களுடன் எடப்பாடி பகுதியில் உள்ளவர்கள் எடப்பாடி தாலுகா அலுவலகத்திலும், வாழப்பாடி பகுதியில் உள்ளவர்கள் வாழப்பாடி தாலுகா அலுவலகத்திலும், சேலம் பகுதியில் உள்ளவர்கள் சேலம் மேற்கு தாலுகா அலுவலகத்திலும், மணக்காடு திடீர் நகர் பகுதியில் உள்ளவர்கள் சேலம் தாலுகா அலுவலகத்திலும் மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story