தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 April 2022 2:36 AM IST (Updated: 2 April 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பூட்டியே கிடக்கும் நூலகம் 
தர்மபுரி மாவட்டம் சுஞ்சல்நத்தம் ஊராட்சியில் ஏரியூர், கூர்க்காம்பட்டி, பட்டக்காரன் புதூர், தண்டா, ஈச்சப்பாடி, திண்ண பெள்ளூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த  மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன் பெறுவதற்காக அரசு நூலகம் அமைக்கப்பட்டது. தற்போது நூலகம் சீரமைக்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையிலும், கடந்த 4 மாதங்களாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி அதிகாரிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ஊர்மக்கள், ஏரியூர், தர்மபுரி.

குவிந்து கிடக்கும் குப்பைகள் 
சேலம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி, சுந்தர் நகர் பகுதி சாலையோரத்தில் பல நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மல்லமூப்பம்பட்டி, சேலம்.

நோய் பரவும் அபாயம் 
சேலம் தாரமங்கலம் பஸ் நிலையம் ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக், கெட்டுபோன காய்கறி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் கழிவு நீர் செல்லாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.பாஸ்கர், தாரமங்கலம், சேலம்

வேகத்தடைகள் அவசியம்
சேலம் மாவட்டம் கருப்பூர் குண்டூர் பகுதி சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிவேகமாக இந்த சாலையில் செல்கின்றன. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், குண்டூர், சேலம்.

சேலம் கோரிமேட்டை அடுத்த செட்டிச்சாவடி சாலையில் வாகனங்கள் மிகவும் அதிவேகமாக செல்கின்றன. அந்த பகுதியில் பள்ளி மற்றும் உயிரியல் பூங்கா அமைந்துள்ளதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
-ஊர்மக்கள், கோரிமேடு, சேலம்.

சாக்கடை கால்வாய் அடைப்பு 
சேலம் அஸ்தம்பட்டி 12-வது வார்டு கோர்ட் ரோடு காலனியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக இதே நிலை நீடிப்பதால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை வேண்டும்.
-ச.சக்திவேல், அஸ்தம்பட்டி, சேலம்.

போக்குவரத்துக்கு இடையூறான இருசக்கர வாகனங்கள் 
தர்மபுரி நகரில் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, பென்னாகரம் ரோடு, சின்னசாமி நாயுடு தெரு மற்றும் நாச்சியப்ப கவுண்டர் தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, கடைவீதி ஆகிய முக்கிய சாலைகளில் கடைகளின் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் மற்றும் மற்ற சாலைகளில் வாகனங்கள் சென்றுவர முடியாத நிலைக்கு போக்குவரத்து மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவாஜி, கடைவீதி, தர்மபுரி.

Next Story