திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் இயக்கம்
திருச்சி-மயிலாடுதுறை இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. தஞ்சைக்கு வந்த ரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்;
திருச்சி-மயிலாடுதுறை இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. தஞ்சைக்கு வந்த ரெயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்கள், ரெயில்கள் போன்ற பொதுபோக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கொரோனா முதல் அலைக்கு பிறகு பஸ் போக்குவரத்து விரைவாக தொடங்கப்பட்டாலும், ரெயில்கள் இயக்கம் தாமதமாகவே தொடங்கியது. என்றாலும் சில விரைவு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
ஆனால் பயணிகள் ரெயில் இயக்கம் தொடங்குவதில் தாமதமானது. ஓராண்டு காலமாக பயணிகள் ரெயில்கள் இயக்கம் படிப்படியாக தொடங்கப்பட்டு வந்தாலும் அவையெல்லாம் சிறப்பு விரைவு ரெயில்களாகவே மாற்றி இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் மயிலாடுதுறை-திருச்சி இடையே ஏப்ரல் 1-ந் தேதி முதல் பயணிகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வரவேற்பு
அதன்படி நேற்று திருச்சியில் இருந்து காலை 7.10 மணிக்கு பயணிகள் விரைவு ரெயில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு காலை 8.30 மணிக்கு வந்தது.
இந்த ரெயிலுக்கு தஞ்சை-திருச்சி ரெயில் பயணிகள் சங்க செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் கவுரவ தலைவர் அய்யனாபுரம் நடராஜன், மானாவாரி விவசாயிகள் சங்க தலைவர் வைத்திலிங்கம், வக்கீல் உமர்முக்தர், பேராசிரியர் திருமேனி, புலவர் செல்வகணேசன் உள்பட பலர் வரவேற்பு அளித்தனர்.
பயணிகளுக்கு இனிப்பு
ரெயில் என்ஜின் டிரைவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன் பயணிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. பின்னர் இந்த ரெயில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு கும்பகோணத்திற்கு காலை 9.30 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 10 மணிக்கும் சென்றடைந்தது.
அதேபோல் மாலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் கும்பகோணத்திற்கு மாலை 6.50 மணிக்கும், தஞ்சைக்கு 7.40 மணிக்கும், திருச்சிக்கு இரவு 9.15 மணிக்கும் சென்றடைந்தது.
2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்ட இந்த ரெயில் பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
கூடுதல் கட்டணம்
இது குறித்து ரெயில் பயணிகள் சங்க செயலாளர் ஜீவக்குமார் கூறும்போது, கொரோனா பரவலுக்கு முன்பு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில் கட்டணம் குறைவு. ஆனால் தற்போது பயணிகள் ரெயில்கள் அனைத்தும் சிறப்பு விரைவு ரெயிலாக இயக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே முன்பு இயக்கப்பட்டதைபோல் பயணிகள் ரெயில்களாக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்துடன் இயக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி முதியோர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.
தஞ்சை-திருச்சி பயணிகள் ரெயில்
தஞ்சையில் இருந்து திருச்சிக்கு காலை 6.45 மணிக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரெயில் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகம் செல்வோருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இந்த ரெயில் நிறுத்தப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக அந்த பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும்.
மேலும் கொரோனா பரவலுக்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story