ஆண்டு கணக்கு அறிக்கையை ஒப்படைத்த முதல் மாநகராட்சி தஞ்சை


ஆண்டு கணக்கு அறிக்கையை ஒப்படைத்த முதல் மாநகராட்சி தஞ்சை
x
தினத்தந்தி 2 April 2022 3:04 AM IST (Updated: 2 April 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திலேயே முதல் மாநகராட்சியாக 2021-2022-ம் நிதியாண்டு கணக்கினை தஞ்சை மாநகராட்சி தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த கணக்கு அறிக்கையை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனரிடம் வழங்கினார்.

தஞ்சாவூர்;
தமிழகத்திலேயே முதல் மாநகராட்சியாக 2021-2022-ம் நிதியாண்டு கணக்கினை தஞ்சை மாநகராட்சி தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த கணக்கு அறிக்கையை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குனரிடம் வழங்கினார்.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சியின் ஆணையராக சரவணகுமார் பொறுப்பெற்றதன் மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சை பழைய பஸ் நிலைய வணிக வளாகம், அதன் எதிர்புறம் அமைந்துள்ள வணிக வளாகங்களை பொது ஏலம் வீட்டு மாநகராட்சி வருவாயை பெருக்கினார். ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி சொத்து, நீண்ட கால குத்தனை முடிந்த பின்னரும் ஒப்படைக்காத சொத்துகளையும் கையப்படுத்தினார்.
2014- தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் ஒவ்வொரு நிதியாண்டு முடிந்ததும் அந்த ஆண்டிற்குரிய ஆண்டு கணக்கினை மே 15-ந் தேதிக்குள் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தணிக்கை துறையிடம் ஒப்படைப்பு
இந்த நிலையில் நடப்பு ஆண்டு கணக்கினை மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க பணியாளர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். அதன்பேரில் மாநகராட்சியின் அலுவலர்கள், பணியாளர்கள் கடந்த மார்ச் மாதம் முழுவதும் இரவு பகலாக பணியாற்றி மார்ச் 31-ந் தேதி ஆண்டு கணக்கினை முடித்தனர்.
அதன்படி தஞ்சை மாநகராட்சியின் ஆண்டு கணக்குகளை, உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குனர் தனபாண்டியனிடம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நேற்று ஒப்படைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் ஆண்டு கணக்கினை ஒப்படைத்த முதல் மாநகராட்சி என்ற பெருமையை தஞ்சை மாநகராட்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், மேலாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், இளநிலை பொறியாளர் கண்ணதாசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், உதவி வருவாய் அலுவலர் சங்கரவடிவேல், கணக்கர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story