கர்நாடக அரசின் மதிய உணவு திட்டத்திற்கு சிவக்குமார சுவாமி பெயர் சூட்டப்படும்


கர்நாடக அரசின் மதிய உணவு திட்டத்திற்கு சிவக்குமார சுவாமி பெயர் சூட்டப்படும்
x
தினத்தந்தி 2 April 2022 3:26 AM IST (Updated: 2 April 2022 3:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசின் மதிய உணவு திட்டத்திற்கு சிவக்குமார சுவாமியின் பெயர் சூட்டப்படும் என்றும், அவர் பிறந்த நாளான ஏப்ரல் 1-ந்தேதி தாசோக தினமாக கொண்டாடப்படும் என்றும் சிவக்குமார சுவாமியின் குருவந்தனா விழாவில் அமித்ஷா முன்னிலையில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்தார்.

பெங்களூரு: கர்நாடக அரசின் மதிய உணவு திட்டத்திற்கு சிவக்குமார சுவாமியின் பெயர் சூட்டப்படும் என்றும், அவர் பிறந்த நாளான ஏப்ரல் 1-ந்தேதி  தாசோக தினமாக கொண்டாடப்படும் என்றும் சிவக்குமார சுவாமியின் குருவந்தனா விழாவில் அமித்ஷா முன்னிலையில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை அறிவித்தார். 

சிவக்குமார சுவாமி

துமகூருவில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவக்குமாரசுவாமி. பக்தர்களால் நடமாடும் கடவுள் என அழைக்கப்பட்ட அவர் தனது 111-வது வயதில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்தார். இந்த நிலையில் அவரது 115-வது ஜெயந்தியையொட்டி குரு வந்தனா (குருவுக்கு மரியாதை செலுத்துதல்) விழா சித்தகங்கா மடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு, குரு மரியாதை செலுத்தி பேசும்போது கூறியதாவது:-

மடாதிபதி சிவக்குமார சுவாமி, ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி, உணவு மற்றும் தங்கும் இடத்தை வழங்கினார். அதே வழியை தான் தற்போது உள்ள மடாதிபதியும் பின்பற்றுகிறார். இந்த மடத்தில் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. இந்த சாதனையை கர்ம யோகி சிவக்குமார சுவாமி படைத்தார்.

உணவு தானியங்கள்

அந்த மடாதிபதி, 12-வது நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கைகளை அமல்படுத்தியதுடன் மக்களை முன்னேற்றும் மையமாகவும் தனது மடத்தை மாற்றினார். இந்த மடத்தில் ஒருவரும் பசியோடு இருப்பது இல்லை. அனைத்து தரப்பை சேர்ந்த மக்களின் குழந்தைகள் 10 ஆயிரம் பேருக்கு இங்கு உணவு, கல்வி, உறைவிடம் வழங்கப்படுகிறது.

சிவக்குமார சுவாமியின் இத்தகைய கொள்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தி கல்விக்கு புதிய வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்வியை தங்களின் தாய்மொழியிலேயே பெற முடியும்.

3 கோடி பேருக்கு வீடுகள்

கடந்த 3 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடி காலத்தில் நாட்டில் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடைவதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. இந்தியா புராதன நாடு. இங்கு பல்வேறு ஆன்மிக மையங்கள் இருக்கின்றன.

அந்த மையங்கள் அவரவர்களின் இடம் மற்றும் தரத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது. அதே நேரத்தில் சில மடாதிபதிகளின் சிறப்பான பணிகளால் புதிய ஆன்மிக மையங்களும் வந்துள்ளன. அதில் ஒன்று தான் சித்தகங்கா மடம். சமுதாயத்தின் நலனுக்காக புனிதமாக கடமையை மேற்கொள்ள ஒருவர் தனது வாழ்க்கையை செலவழிக்கும்போது, கடவுள் அவரை சுற்றி இருக்கிறார்.

மதிய உணவு திட்டம்

அதன் மூலம் பலரை தன் பாதையில் பயணிக்க வைக்கிறார். மற்றவர்களையும் ஆன்மிகவாதிகளாக மாற்றுகிறார். சிவக்குமார சுவாமி 111 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவரது கொள்கைகள் வரும் நூற்றாண்டுகளில் பலரை வழிநடத்தும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பேசும்போது, வடக்கில் கங்காவும், தெற்கில் சித்தகங்காவும் உள்ளன என்று கூறினார்.

கங்கையில் புனித நீராடினால் முற்காலத்தில் செய்த பாவங்கள் நீங்குகிறது. அதே போல் சித்தகங்கா, ஆன்மிக வாழ்க்கைக்கு வழிகோழுகிறது. இந்த சித்தகங்கா மடம் 600 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதில் இருந்து பசவண்ணரின் கொள்கைகளை கற்பிக்கும் மையமாக திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.

தாசோக தினம்

இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதி தாசோக தினமாக (கூட்டாக அமர்ந்து சாப்பிடும் தினம்) கொண்டாடப்படும். அதேபோல் மாநில அரசின் மதிய உணவு திட்டத்திற்கு மடாதிபதி சிவக்குமார சுவாமியின் பெயர் சூட்டப்படும்.

 ஏழை குழந்தைகளுக்கு சிவக்குமார சுவாமி இலவச உணவு, கல்வி, தங்குமிடத்தை வழங்கினார். அவரது இந்த சேவையை போற்றும் விதமாக மதிய உணவு திட்டத்திற்கு அவரது பெயரை சூட்ட முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்.

அனைவருக்கும் உணவு

அவர் இந்த மடத்தில் 98 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். அவர் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களை அதாவது உணவு, கல்வி, தங்குமிடம் வழங்கினார். இதை வேறு யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. சிவக்குமார சுவாமியின் பாதையில் பயணிக்கும் வகையில் அனைவருக்கும் உணவு, கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய எனது அரசு உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இந்த விழாவில் சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சித்தலிங்க சுவாமி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரிகள் பிரகலாத்ஜோஷி, பகவந்த் கூபா, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story