சேலம் மாநகராட்சி 4, 17-வது வார்டுகளில் சிறுபாலம், சாலை அமைக்கும் பணி மேயர், ஆணையாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சி 4, 17-வது வார்டுகளில் சிறுபாலம், சாலை அமைக்கும் பணியை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சேலம்,
ஆய்வு
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி மண்டலம் 4 மற்றும் 17-வது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள அத்வைத ஆசிரமம் ரோடு முதல் பிருந்தாவனம் ரோடு வரை 1½ கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள ஓடையை தூர்வாரி ஓடையின் குறுக்கே சிறுபாலம் அமைத்து தருவது, சிவாலய நகரில் கழிவுநீர் மழைநீர் வடிகால் அமைப்பது, சென்றாயகவுண்டர் தெருவில் உள்ள சாக்கடையை தூர்வாரி சீரமைத்து தருவது, மோளப்பட்டி வட்டம் பகுதியில் புதியதாக சாக்கடை வசதி மற்றும் சாலை அமைத்து தருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நலவாழ்வு மையம்
இதைத்தொடர்ந்து குட்டை தெரு பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்துவது, நியூ பேர்லேண்ட்ஸ் 2, 3 மற்றும் 4-வது குறுக்கு தெருவில் 1¼ கிலோ மீட்டர் நீளத்திற்கு வடிகால் வசதி அமைத்தல், 510 மீட்டர் நீளத்திற்கு தார்சாலை மற்றும் ரூ.1.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறுபாலம் அமைக்கும் பணியையும், கிரின்வேஸ் சாலையில் 1¾ கிலோ மீட்டர் நீளத்திற்கு இருபுறமும் வடிகால் அமைக்கும் பணியையும் மேயர், ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சேலம் மாநகராட்சிக்கு 32 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்ட அரசின் அனுமதி பெறப்பட்டு சுமார் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி மண்டலம் 4-வது வார்டில் அழகாபுரம் பகுதியில் தாட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியையும் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டல குழுத்தலைவர் உமாராணி, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர் குமரவேல், மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி செயற்பொறியாளர் சிபிசக்ரவர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story