‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 2 April 2022 2:50 PM IST (Updated: 2 April 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிபம்பு குடிநீர் குழாய் ஆக்கிரமிப்பு



சென்னை அடையாறு மடுவங்கரை, பிள்ளையார் கோவில் தெருவில் சைதை துரைசாமி எம்.எல்.ஏ.வாக இருந்த போது அமைக்கப்பட்டிருந்த அடிபம்பு குடிநீர் குழாய் (போர்வெல்) தற்போது, தனிநபரின் பலனுக்காக அகற்றப்பட்டுள்ளது. மேலும் தனியார் கட்டிடத்திற்கு கழிவுநீர் இணைப்பும் கொடுத்துவிட்டார்கள். கோடை காலம் நெருங்கி வரக்கூடிய காலகட்டத்தில், இந்த அடிபம்பு குடிநீர் குழாயை அகற்றியதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே அகற்றப்பட்ட அடிபம்பு குடிநீர் குழாயை மீண்டும் இதே இடத்தில் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வெங்கடேசன், மடுவங்கரை.

கால்வாய் மூடப்படுமா?


சென்னை கொருக்குப்பேட்டை ஏகாம்பரம் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக திறந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த கால்வாயானது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் முதியோர் உள்பட பலர் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே விபரீதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு இந்த கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?

- சங்கர் ராஜா, கொருக்குப்பேட்டை.

பஸ் நிறுத்தத்தில் இடையூறு


சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலை ஆர்.டி.ஓ மைதானம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் தள்ளுவண்டி கடைகளும், ஷேர் ஆட்டோக்களும் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் பயணிகள் நிழற்குடையில் நிற்கமுடியாமல் சாலையில் நிற்கும் அவலம் தொடர்கிறது. எனவே பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

- ரஞ்சித்குமார், கே.கே.நகர்.

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

சென்னை கொளத்தூர் சன்னதி தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரின் கீழ் பகுதியில் ஆபத்தான முறையில் கேபிள் வெளியே தொங்கியபடி இருக்கிறது. மேலும் டிரான்ஸ்பார்மரில் உள்ள கம்பிகளில் அடிக்கடி உராய்வு ஏற்பட்டு தீப்பொறி விழுகின்றன. இதனால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் மின்வாரியம் கள ஆய்வு செய்து டிரான்ஸ்பார்மரை சரி செய்து தர வேண்டும்.

- மகேந்திரன், கொளத்தூர்.

விபத்துகள் தடுக்கப்படுமா?


சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள சாலையில் இருக்கும் தனியார் கல்லூரி வாயிலின் எதிரில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி சாலையிலிருந்து சற்று உயர்ந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே இதுபோன்று விபத்துக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு பாதாள சாக்கடையின் மூடியை சரி செய்ய வேண்டும்.

- மீஞ்சூர் கோதை ஜெயராமன், நசரத்பேட்டை.

சேதமடைந்த வடிகால்வாய் மூடி

சென்னை அண்ணாநகர் கிழக்கு 6-வது தெரு ‘டி’ பிளாக்கில் உள்ள மழைநீர் வடிகால் மூடி சேதமடைந்துள்ளது. இந்தநிலை கடந்த 2 ஆண்டாக தொடர்கிறது. எனவே வடிகால் மூடியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

- சுரேஷ், அண்ணாநகர் கிழக்கு.

சாய்ந்த மின் இணைப்பு பெட்டி நேராகுமா?

சென்னை கோயம்பேடு தெற்கு மாட வீதியில் பழுதாகி இருந்த மின் இணைப்பு பெட்டியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து தரையில் இருந்து உயர்த்தி வைத்தனர். ஆனால் தற்போது இந்த மின் இணைப்பு பெட்டி சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சாய்ந்து இருக்கும் மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வெண்டும்.

- தேவராஜ், கோயம்பேடு.

தேங்கிநிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள தனியார் பள்ளி எதிரில் கடந்த 8 நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. மேலும் நோய் கிருமி பரவ வாய்ப்பு உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் இந்த பகுதியை சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

- சுகுமாரன், சூளைமேடு.

பழுதடைந்த மின்கம்பம் சரிசெய்யப்படுமா?


திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து உள்ளது. மேலும் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் இருக்கிறது. மேலும் மின்கம்பத்தில் சில இடங்களில் உடைந்தும் காணப்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து ஆபத்தான மின்கம்பத்தை சரி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- செல்வமணி, திருவேற்காடு.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் திருவஞ்சோி சுப்பன் தெருவில் உள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மின்கம்பிகள் வெளியே தெரிந்த படியும் உள்ளது. எனவே மின்கம்பம் முழுவதும் சேதமடைந்து கீழே விழும் முன்பு பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

- பன்னீர்செல்வம், செங்கல்பட்டு.

Next Story