ஊட்டியில் குதிரை பந்தயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்


ஊட்டியில் குதிரை பந்தயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 2 April 2022 4:41 PM IST (Updated: 2 April 2022 4:41 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

ஊட்டி

ஊட்டியில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

குதிரை பந்தயம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பந்தயம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி குதிரை பந்தயம் நடத்தப்பட்டது. இதனால் பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. நடப்பாண்டில் ஊட்டியில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை, பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் இருந்து குதிரைகள் பிரத்யேக வாகனங்களில் ஊட்டிக்கு அழைத்து வரப்படுகின்றன. வாகனங்களில் இருந்து குதிரைகளை கீழே இறக்கி தங்க வைப்பதற்கு கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மழைநீர் உள்ளே புகாத வகையில் மேற்பகுதியில் தார்ப்பாய் போடப்பட்டு இருக்கிறது. குதிரைகளுக்கு காலை, மாலையில் பயிற்சியாளர்கள் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது.

ஓடுபாதை சீரமைப்பு

குதிரை பந்தயத்துக்கு இதுவரை 300-க்கும் மேற்பட்ட குதிரைகள் வந்து உள்ளன. அவை கொட்டகைகளில் தனித் தனியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கொரோனா பரவல் மிகவும் குறைந்து உள்ளதால் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குதிரை பந்தயத்தை பார்வையிட அனுமதிக்கப்பட இருக்கிறது. இதற்காக கேலரிகள் தயாராக உள்ளது. மேலும் ஊட்டியில் நடைபெறும் குதிரை பந்தயத்தை சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள மைதானங்களில் நேரடியாக பார்ப்பதற்காக வசதி ஏற்படுத்தப்படுகிறது.
பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஓடும் குதிரைகளை நேரடியாக பதிவு செய்ய 4 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குதிரைகள் ஓடுபாதையில் ஆற்று மணல் கொட்டி சீரமைக்கப்பட்டு உள்ளது. அதனருகே புல்வெளிகள் தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு பச்சை பசேலென காணப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஊட்டியில் நடைபெறும் குதிரைப் பந்தயத்தை பார்வையாளர்கள் நேரில் பார்க்க உள்ளனர். கோடை சீசனை வரவேற்கும் வகையில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

Next Story