மாணவர்களை அதிகமாக ஏற்றி சென்ற 7 ஆட்டோக்கள் பறிமுதல்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, மாணவர்களை அதிகமாக ஏற்றி சென்ற 7 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத பள்ளி வாகனமும் சிக்கியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் அரசு, தனியார் பள்ளிகள் என மொத்தம் 105 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு பெரும்பாலான மாணவ-மாணவிகள் ஆட்டோ, வேன்களில் செல்கின்றனர். இதில் ஒருசில ஆட்டோக்களில் சாலை விதிகளை மீறி அதிக அளவில் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்.
டிரைவருடன் அவருடைய இருக்கையில் 2 மாணவர்கள் அமர்ந்து கொள்கின்றனர். இதனால் ஒரு ஆட்டோவில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்றி செல்வதை பார்க்க முடிகிறது. இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி’யில் வெளியானது. இதன் எதிரொலியாக வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் திண்டுக்கல்லில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகள் ஏற்றி செல்லப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் ஒரு ஆட்டோவில் மட்டும் 15 மாணவர்கள் ஏற்றி செல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி சென்ற 7 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பிற ஆட்டோ டிரைவர்களிடம், அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது என்று அதிகாரிகள் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
இதற்கிடையே பள்ளி வாகனங்கள் சிலவற்றையும் சோதனையிட்டனர். அப்போது ஒரு பள்ளி வேன், தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் அந்த பள்ளி வேனையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story