10 கி.மீ. தூரம் நடை பயிற்சி சென்ற போலீஸ் சூப்பிரண்டு


10 கி.மீ. தூரம் நடை பயிற்சி சென்ற போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 2 April 2022 8:52 PM IST (Updated: 2 April 2022 8:52 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இருந்து ஈத்தங்காடு வரை 10 கி.மீ. தூரம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நடைபயிற்சி மேற்கொண்டார்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இருந்து ஈத்தங்காடு வரை 10 கி.மீ. தூரம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நடைபயிற்சி மேற்கொண்டார்.
போலீஸ் சூப்பிரண்டு
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஹரிகிரண் பிரசாத் உள்ளார். இவர் பதவியேற்றபோது தனது பெற்றோருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடந்த சைக்கிள் போட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் அவருடைய மனைவி விஷாலா ஹரி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் விஷாலா ஹரி 2-வது பரிசை பெற்றார். மேலும் ஹரிகிரண் பிரசாத் மற்றும் அவருடைய மனைவி விஷாலா ஹரி ஆகியோர் தங்களுடைய மகன் நஸ்ரித்தை கவிமணி அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.
போதை பொருள் தடுப்பு
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். 
ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்று வரும் போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியதோடு அவர்களோடு சேர்ந்து காலை உணவும் சாப்பிட்டார்.
10 கி.மீ. நடைபயிற்சி
இந்த நிலையில் நாகர்கோவில் ஈத்தாமொழி ரோட்டில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்  நடைபயிற்சி மேற்கொண்டார் இடலாக்குடி, கரியமாணிக்கபுரம் வழியாக சுசீந்திரம் புறவழிச்சாலையில் ஈத்தங்காடு வரை நடைபயிற்சி செய்தார். அந்த சாலையில் வழக்கமாக ஏராளமானோர் நடைபயிற்சி செல்வது வழக்கம். இதே போல நேற்று காலையிலும் ஏராளமானோர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும் நடைபயிற்சி மேற்கொண்டார். 
அதே சமயம் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுக்கு அவர் உயர் போலீஸ் அதிகாரி என்று தெரியவில்லை. மக்களோடு மக்களாக அவரும் நடை பயிற்சியை மேற்கொண்டார். அவர் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார். 

Next Story