பாலக்கோட்டில் திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை


பாலக்கோட்டில் திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 2 April 2022 10:03 PM IST (Updated: 2 April 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோட்டில் திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.

பாலக்கோடு:
பாலக்கோட்டில் திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுப்பெண் 
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்தவர் நாகராஜ்- பூங்கொடி. இவர்களது மகள் மகேஸ்வரி (வயது 25). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் அரசகுமார் என்பவருக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது. கடந்த வாரம் பாலக்கோட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு மகேஸ்வரி தனது கணவருடன் வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அரசகுமார் மனைவியை மாமனார் வீட்டில் விட்டு விட்டு வேலை விஷயமாக மைத்துனருடன் சென்னை சென்றார். இதனிடையே நேற்று அதிகாலை அவர்கள் வீட்டிற்கு வந்து மகேஸ்வரியின் அறை கதவை தட்டி உள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து பார்த்தனர். 
தற்கொலை
அப்போது புதுப்பெண் மகேஸ்வரி துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story