மகப்பேறு மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்


மகப்பேறு மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 2 April 2022 10:31 PM IST (Updated: 2 April 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகப்பேறு மரணங்கள் ஏற்படுவதை டாக்டர்கள் தவிர்த்திட வேண்டும் என கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு மற்றும் சிசு மரணம் தடுப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் தனியார் மருந்தகத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கருக்கலைப்பு செய்து வந்தவர்களை கண்டறிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இனி யாரேனும் தனியார் மருந்தகங்களில் சட்டத்திற்கு புறம்பான வகையில் கருக்கலைப்பு செய்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு மருந்தகங்களில் டாக்டர்களின் உரிய பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

மகப்பேறு மரணங்கள்

அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள், மகப்பேறு மரணங்கள் ஏற்படுவதை தவிர்த்திட வேண்டும். கர்ப்பிணி பெண்கள் குறித்த விவரத்தினை உரிய நேரத்தில் பதிவு செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை உடனுக்குடன் அந்தந்த வட்டார டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள்  வழங்கிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பூங்கொடி, அனைத்து வட்டார டாக்டர்கள் மற்றும் பொறுப்பு மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story