ரூ.1.80 கோடியில் புதுப்பொலிவு பெறும் தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி


ரூ.1.80 கோடியில் புதுப்பொலிவு பெறும் தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி
x
தினத்தந்தி 3 April 2022 12:15 AM IST (Updated: 2 April 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.1.80 கோடியில் புதுப்பொலிவு பெறும் தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்:-

‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.1.80 கோடியில் புதுப்பொலிவு பெறும் தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி

தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி. இந்த ஆஸ்பத்திரி தொடங்கி 145 ஆண்டுகள் ஆகிவிட்டது. 
இந்த ஆஸ்பத்திரியில் முன்பு அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நாளடைவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நவீன மருத்துவ வசதிகள் தொடங்கப்பட்ட பெரும்பாலான சிகிச்சை பிரிவுகள் அங்கு சென்றுவிட்டன.
தற்போது ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு, குழந்தைகள் நலப்பகுதி, கண் சிகிச்சை பகுதி, சித்த மருத்துவ பகுதி, காசநோய் பிரிவு ஆகியவை மட்டும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர புறநோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

கண் ஆஸ்பத்திரி

இந்த ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர்.
அதேபோல் ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கண் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. தற்போது கண் ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கண் ஆஸ்பத்திரி செயல்பட்டு வரும் கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்தது.

புதுப்பிக்கும் பணி

அதுமட்டுமின்றி ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியின் மெயின் கட்டிடமான தாமஸ்ஹாலும் பழமையான கட்டிடமாகும். இவைகளை பழமை மாறாமல் புதுப்பித்து வர்ணம் பூச முடிவு செய்யப்பட்டது. தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றனர்.
இதற்காக கண் ஆஸ்பத்திரி கட்டிடங்களில் கம்புகளால் ஆன சாரம் அமைக்கப்பட்டு, பழுதடைந்த பகுதிகளை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இப்போது பழமையான கட்டிடங்களும் புதுப்பிக்கப்பட்டு வருவதால் ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி புதுப்பொலிவு பெற்று வருகிறது. கட்டிடங்களை புதுப்பிக்கும் பணியை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2 மாதத்தில் நிறைவு பெறும்

இது குறித்து மாநகராட்சி இளநிலை உதவி பொறியாளர் அறச்செல்வி கூறும்போது, தாமஸ்ஹால், கண் ஆஸ்பத்திரி கட்டிடம், காசநோய் பிரிவு கட்டிடம் ஆகியவை பழமைவாய்ந்த கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. காசநோய் பிரிவு கட்டிடத்தில் பணி முடிவடைந்துவிட்டது. அவற்றை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க இருக்கிறோம். தாமஸ்ஹால் கட்டிடமும், கண் ஆஸ்பத்திரி கட்டிடமும் புதுப்பிக்கும் பணி இன்னும் 2 மாதத்தில் முடிவடைந்துவிடும் என்றார்.

Next Story