தூத்துக்குடி துறைமுகம் 34.12 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை


தூத்துக்குடி துறைமுகம் 34.12 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை
x
தினத்தந்தி 2 April 2022 10:54 PM IST (Updated: 2 April 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக 2021-2022 நிதியாண்டில் 34.12 மில்லியன் டன் சரக்குகளையும், 7.81 லட்சம் சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கடந்த நிதியாண்டு 2021-22-ல் 34.12 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 

7.33 சதவிகிதம் கூடுதல்

2020-21 நிதியாண்டில் கையாளப்பட்ட 31.79 மில்லியன் டன் சரக்குகளை விட 7.33 சதவிகிதம் கூடுதலாகும். இறக்குமதியை பொருத்தவரையில் 24.19 மில்லியன டன்களும், ஏற்றுமதியை பொருத்தவரையில் 9.45 மில்லியன் டன்களும் கையாண்டுள்ளது. இந்திய அரசின் மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் போக்குவரத்து துறை அமைச்சகம் 2021-22 நிதியாண்டிற்காக நிர்ணயம் செய்த 34 மில்லியன் டன் சரக்குகளை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த மாதம் 30-ந்தேதி அன்று கடந்துள்ளது. துறைமுகம் சரக்கு பெட்டகங்கள் கையாளுவதில் 2021-22 நிதியாண்டில் 7.81 லட்சம் கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட அளவான 7.62 லட்சத்தை ஒப்பிடுகையில் 2.49 சதவீதம் கூடுதலாகும்.

காற்றாலை உதிரி பாகங்கள்

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டில் காற்றாலை, காற்றாலை உதிரிபாகங்கள் மற்றும் பொது சரக்குகளையும் கையாண்டு பல்வேறு சாதனைகளை படைத்தது. குறிப்பாக 81.50 மீட்டர் நீளமுடைய மிகப்பெரிய காற்றாலை இறகுகளை கையாண்டுள்ளது. 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்து 90 டன்கள் நிலக்கரியையும், 53 ஆயிரத்து 604 டன்கள் சுண்ணாம்பு கற்களையும் கையாண்டுள்ளது. 93 ஆயிரத்து 719 டன்களுடன் கூடிய அதிக பொது சரக்குகளை கொண்ட பெரிய கப்பலை கையாண்டுள்ளது மற்றும் முக்கிய வழித்தடத்தில் பயணிக்க கூடிய 277 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய சரக்கு பெட்டக கப்பலை கையாண்டுள்ளது.

நிதிநிலை செயல்பாடு

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு 2021-2022 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பிறகு உள்ள நிகர உபரி வருவாய் ரூ.130.01 கோடி ஆகும். துறைமுகத்தில் கடந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டுள்ள திட்டங்களான சரக்குபெட்டக கண்காணிக்கும் அமைப்பு ரூ.42 கோடி செலவிலும், 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரியமின் சக்தி ஆலை ரூ.54 லட்சம் செலவிலும் மற்றும் மின்சாரத்தால் இயங்கக் கூடிய 6 இ-கார்கள் ஒப்பந்த அடிப்படையில் ரூ.2.22 கோடி செலவிலும் வாங்கப்பட்டு துறைமுக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகம் கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக உணவு, மாட்டு தீவனம், கனிமங்கள், சமையல் எண்ணெய், தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்பு கிடங்கு தொடங்குவதற்காக சுமார் 60 ஏக்கரும், சிமெண்டு கையாளும் முனையம் அமைப்பதற்காக 12.79 ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கியுள்ளது.

சரக்கு பெட்டக முனையங்கள்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கப்பல் வந்து செல்லும் நுழைவு வாயிலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், கரி சேமிப்புக் கிடங்கில் அமையப்பெற்று இருக்கும் சாலையினை மேம்படுத்துதல் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், பொது சரக்குகளை கையாளும் சரக்கு தளத்தை சரக்குபெட்டக முனையமாக மாற்றுதல், 2.8 மெகாவாட் காற்றாலை மற்றும் 5 மெகாவாட் தரைதள சூரியமின்சார உற்பத்தி நிலையம் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதலாக வெளிதுறைமுக திட்டத்தின் முதற்கட்டமாக 16 மீட்டர் மிதவை ஆழத்துடன் கூடிய இரண்டு சரக்கு பெட்டக முனையங்களும் (1000 மீட்டர் நீளத்துடன் கூடிய தளங்கள்) மற்றும் 100 மெகாவாட் திறன் கொண்ட (புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி) காற்றாலை, சூரிய மின் ஆலை அமைவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்காவும் பொது தனியார் கூட்டமைப்பு கீழ் அமைக்கப்பட உள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்தின் கூறுகையில், ‘வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளும் அளவு கொரோனா தொற்றால் ஏற்பட்டு இருந்த வர்த்தக வீழ்ச்சி, தற்போது சரக்கு போக்குவரத்து மூலம் அதிகரித்து வருகிறது’ என்றார். இதற்காக சிறப்பாக பணியாற்றி அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story