ஜோதிடரை கட்டையால் அடித்து கொலை செய்த 2 வாலிபர்கள் கைது
ஊத்துக்குளி அருகே குடிபோதையில் ஜோதிடரை கட்டையால் அடித்து கொலை செய்த 2 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே குடிபோதையில் ஜோதிடரை கட்டையால் அடித்து கொலை செய்த 2 வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஜோதிடர்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ெரயில் நிலையம் அருகே உள்ள குன்னத்தூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் துரைசாமி (வயது 68). மதுப் பிரியரான இவர் மது அருந்துவதற்கு காங்கயம் சாலையில் உள்ள அரசு மதுபான கடைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி காங்கயம் சாலையில் மாமரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குளத்துக்காட்டில் துரைசாமி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று துரைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயதான காரணத்தினாலும் அதிகமாக மது அருந்தியதன் காரணமாகவும் அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
கொலை
பின்னர் பிரேத பரிசோதனையில், அவர் தலையில் பலத்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதை கொலை வழக்காக மாற்றிய போலீசார், துரைசாமி இறந்து கிடந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற தடயங்கள் அடிப்படையிலும், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தும் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு வழிகாட்டுதலின்படி ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வேலுச்சாமி, தலைமை காவலர்கள் சின்னச்சாமி, மணிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
2 வாலிபர்கள் கைது
இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு பதுங்கியிருந்த 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி, பொன்னம்பாளையம் கவுண்டன் வீதி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் பிரகாஷ் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் திருமுருகன் (23) என்பதும், ஊத்துக்குளி அருகே முதலைபாளையம் பகுதியில் குடியிருந்து கொண்டு தனியாருக்குச் சொந்தமான பனியன் துணிகளுக்கு சலவை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் சம்பவத்தன்று குடிபோதையில் துரைசாமிக்கும், இவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் அங்கு கிடந்த கட்டையால் துரைசாமியின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story