திருப்பத்தூர் அருகே மலைப்பாதையில் மினிவேன் கவிழ்ந்து ஒரே ஊரை சேர்ந்த 11 பெண்கள் பல
திருப்பத்தூர் அருகே மலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மினிவேனில் சென்ற போது திடீரென வேன் கவிழ்ந்து பள்ளத்தில் உருண்டதில் ஒரே ஊரை சேர்ந்த 11 பெண்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே மலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மினிவேனில் சென்ற போது திடீரென வேன் கவிழ்ந்து பள்ளத்தில் உருண்டதில் ஒரே ஊரை சேர்ந்த 11 பெண்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை நெல்லிவாசல்நாடு ஊராட்சி பகுதியில் புலியூர் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதே கிராமத்தின் அருகில் 3 கிலோ மீட்டர் தொலைவில் சேம்பரை என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் மலை உச்சியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
புலியூர் கிராம மக்கள் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை ஊரோடு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் சாமி கும்பிட்டு வருவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை 30-க்கும் மேற்பட்டோர் புலியூரில் இருந்து மினிவேன் மூலம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர். பலர் தங்களது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றனர்.
பின்னோக்கி இறங்கியது
மினிவேன், சேம்பரை பகுதியை கடந்து சாலை வசதி இல்லாத கரடு முரடான ஜல்லி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மேட்டுப்பகுதியில் சென்ற போது மினிவேன் மேலே ஏற முடியாமல் பின்னோக்கி இறங்கியது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினிவேன் 50 அடி பள்ளத்தில் குட்டிக்கரணம் அடித்தவாறு கவிழ்ந்தது. இதனால் மினிவேனில் இருந்தவர்கள் அய்யோ, அம்மா என கூச்சலிட்டனர்.
இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் விபத்தை பார்த்து உடனடியாக ஊர்பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் போலீசார் மற்றும் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சுகள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
11 பெண்கள் சாவு
இந்த விபத்தில் புலியூர் கிராமத்தை சேர்ந்த வேந்தன் மனைவி சுகந்தா (வயது 55), பரசுராமன் மனைவி துர்கா (40), மகள்கள் பவித்ரா (18), பரிமளா (12), துக்கன் மனைவி செல்வி (35), குள்ளப்பன் மனைவி மங்கை (60) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு உடனடியாக புதூர்நாடு பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
டாக்டர்கள் பரிசோதித்தபோது அலமேலு (12), சென்னம்மாள் (12), திக்கியம்மாள்(30) ஆகியோர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சின்னதிக்கி (35), துக்கன் மகள் 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஜெயப்பிரியா (16)ஆகியோர் இறந்து விட்டனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
டி.ஐ.ஜி.விசாரணை
இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் டிரைவர் பரந்தாமன் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை பார்வையிட்டு விபத்து குறித்து கேட்டறிந்தனர்.
விபத்து நடந்தது எப்படி?
அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் டி.ஐ.ஜி.ஆனிவிஜயா கூறியதாவது:-
சாலை வசதி இல்லாத ஜல்லிக்கல் அமைந்த சாலையில் மினிவேனில் 30-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது துரதிர்ஷ்டவசமாக சேம்பரை அடுத்த மலைப்பகுதியில் மினிவேன் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிர் இழந்தனர். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் 3 பேரும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி 2 பேரும் இறந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவிலுக்கு சென்றபோது மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து ஒரே ஊரை சேர்ந்த 11 பெண்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story