தட்டுப்பாடு இல்லாதவாறு குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்


தட்டுப்பாடு இல்லாதவாறு குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 April 2022 11:35 PM IST (Updated: 2 April 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார்.

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார்.
12½ லட்சம் மக்கள்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சிப்பணிகள், குடிநீர் வினியோகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பாலப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் 8¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மாநகரில் 12½ லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். இதுதவிர வெளிமாவட்ட மக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். இவர்களுக்கான குடிநீர் தேவை நிர்ணயிக்கப்பட்ட அளவுப்படி 172 எம்.எல்.டி. அளவு நீர் நாளொன்றுக்கு வினியோகம் செய்ய வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறை
மாநகரில் குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 2-வது குடிநீர் திட்டம், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் 3-வது குடிநீர் திட்டம் மூலமாக நாளொன்றுக்கு சராசரியாக 120 எம்.எல்.டி. அளவு நீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் 15-ந்தேதிக்கு பிறகு தினமும் 2 திட்டங்கள் மூலமாக 90 எம்.எல்.டி. அளவு குடிநீர் மட்டுமே பெறப்பட்டு வருவதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 7 நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதுபோல் மாநகர பகுதியில் குவியும் குப்பையை உடனடியாக அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பேணவும் அமைச்சர் அறிவுறுத்தினார். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும், வழக்கு நிலுவையை விரைந்து முடித்து பாலப்பணிகளை தொடங்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
குடிநீர் வினியோகம்
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
கோடைகாலம் தொடங்கி விட்டதால் மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்கச்செய்ய வேண்டும். நமக்கு கிடைக்கும் நீரை மக்களுக்கு பகிர்ந்து வினியோகம் செய்வதை முறைப்படுத்த வேண்டும். வார்டு பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் குழாயை இறக்கி தண்ணீரை வழங்கினால் அன்றாட தேவைகளுக்கு மக்கள் அதை பயன்படுத்திக்கொள்வார்கள். குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் தடையின்றி மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாக லாரிகளை பயன்படுத்தி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கச்செய்ய வேண்டும்.
பணிகள் விவரம் அறிவிப்பு பலகை
4-வது குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாதந்தோறும் இதுபோன்ற ஆய்வுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஜூன் மாதத்துக்குள் மாநகரில் நடைபெறும் பெரும்பாலான பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளீர்கள். அதை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும்.
குப்பை பிரச்சினை மாநகரில் அதிகம் உள்ளது. குப்பைகளை ரோட்டோரம் தேங்காமல் உடனடியாக அகற்றி பாறைக்குழியில் அவற்றை அழிப்பதற்கான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செய்ய வேண்டும். பாறைக்குழி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். மக்கள் இயக்கமாக மாற்றி பிளாஸ்டிக் இல்லா திருப்பூர் நகரை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார், சுப்பராயன் எம்.பி., துணை மேயர் பாலசுப்பிரமணியன், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, கோவிந்தராஜ், உமாமகேஷ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Next Story