பால் வரத்து குறைவால் வெண்ணெய் உற்பத்தி பாதிப்பு
தற்போது கோடை காலத்தையொட்டி பால் வரத்து குறைந்ததன் காரணமாக சுவை மிகுந்த ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி
தற்போது கோடை காலத்தையொட்டி பால் வரத்து குறைந்ததன் காரணமாக சுவை மிகுந்த ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி வெண்ணெய்
பண்டிகை நாட்கள், சுப நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள் என்றால் அனைவரது நினைவுக்கும் வருவது இனிப்பு பலகார வகைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருளாக இனிப்பு வகைகள் உள்ளன.
அனைத்து இனிப்பு வகைகளும் சுவையாக இருப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவது வெண்ணெய். அதிலும் குறிப்பாக ஊத்துக்குளி வெண்ணெய்க்கு தனி சுவை உள்ளது. ஊத்துக்குளி சுற்றுவட்டாரப் பகுதி ஆற்று நீர் பாசனம், வாய்க்கால் பாசனம் இல்லாமல் பருவ மழையை நம்பியே இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
80 சதவீதம் நெய்
இப்பகுதி விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளான மாடு, எருமை போன்றவற்றிற்கு இயற்கை மேய்ச்சல் உணவுடன் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்றவற்றை உணவாக கொடுத்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை வெண்ணெய் உற்பத்திக்கு ஏற்றதாக இருப்பதின் காரணமாக ஊத்துக்குளி வெண்ணெய் சுவை மிகுந்ததாக உள்ளது.
பிற பகுதிகளில் உற்பத்தி செய்யும் வெண்ணெயை உருக்கினால் 70 சதவீதம் நெய் கிடைக்கும். ஆனால் ஊத்துக்குளி வெண்ணெயை உருக்கினால் 80 சதவீதம் நெய் கிடைப்பதுடன் மனம் நிறைந்ததாக இருக்கும். இதன் காரணமாகவே ஊத்துக்குளி வெண்ணெய் புகழ்பெற்று விளங்குகிறது.
வெண்ணெய் உற்பத்தி
ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பால் அரைக்கும் எந்திரங்கள் உள்ளன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை காய்ச்சி எந்திரத்தில் அரைக்கும்போது பால் கலந்த கிரீம் கிடைக்கிறது. சுமார் 10 லிட்டர் பாலுக்கு 1 கிலோ கிரீம் கிடைக்கிறது. இப்படி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் எடுக்கப்படும் கிரீம்2,3 தினங்களுக்கு ஒருமுறை வெண்ணெய் அடிக்கும் இடத்திற்கு மொத்தமாக கொண்டு செல்லப்படுகிறது.
இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வெண்ணெய் அடிக்கும் நிலையங்கள் ஊத்துக்குளி பகுதியில் உள்ளன. அங்கு பால் கலந்த கிரீமை அடித்து சுத்தமான வெண்ணெய்யாக பிரித்து எடுக்கின்றனர். ஒரு கிலோ கிரீம் ரூ.380 முதல் ரூ.400 வரை கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ வெண்ணெய் ரூ.470 முதல் ரூ.490 வரை விற்பனை செய்யப்படுகிறது. 15 கிலோ எடை கொண்ட வெண்ணெயை டின்னில் அடைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பால் வரத்து குறைவு
தற்போது கோடை வெயில் நாளுக்குநாள் அதிகரித்து வருவதன் காரணமாக விவசாய நிலத்தில் புல், பூண்டுகள் முளைக்காமல் காய்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக கால்நடைகளுக்கு இயற்கையான மேய்ச்சல் உணவு கிடைப்பதில்லை. மேலும் கால்நடைகளிடம் இருந்து பால் குறைவாக கிடைக்கின்றது.
மேலும் கோடைகாலத்தில் கால்நடை தீவனங்கலான சோளத்தட்டு, பருத்திக்கொட்டை புண்ணாக்கு போன்றவற்றின் விலை அதிகரிப்பின் காரணமாக விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்பனை செய்கின்றனர். இதன்காரணமாக ஊத்துக்குளி பகுதியில் பால் வரத்து குறைந்து வெண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story