ஈழத்தமிழர்களை அழிக்க உலக நாடுகளில் வாங்கிய கடன்களே காரணம்
இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு ஈழத்தமிழர்களை அழிக்க உலக நாடுகளில் வாங்கிய கடன்களே காரணம் என்று வடமாகாண முன்னாள் மந்திரி அனந்தி சசிதரன் கூறினார்.
தஞ்சாவூர்:-
இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு ஈழத்தமிழர்களை அழிக்க உலக நாடுகளில் வாங்கிய கடன்களே காரணம் என்று வடமாகாண முன்னாள் மந்திரி அனந்தி சசிதரன் கூறினார்.
பேட்டி
இலங்கை வட மாகாண முன்னாள் மந்திரியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழக பொதுச் செயலாளருமான அனந்தி சசிதரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதார பிரச்சினை
இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினை பற்றி பல தரப்பட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. பொருளாதார பிரச்சினை பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர்களான நாங்கள் இதுபோன்ற பல பொருளாதார பிரச்சினைகளை தாண்டி வந்துள்ளோம்.
வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுகளாக பெரிய பொருளாதார பிரச்சினையை தாண்டி வந்துள்ளோம். மருந்து, உணவு, சுகாதார பொருட்கள், எண்ணெய் உள்ளிட்ட பல பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வாழ்ந்து இருக்கிறோம். எனவே இந்த பொருளாதார பிரச்சினை என்பதை நாங்கள் பெரிய விஷயமாக பார்க்கவில்லை.
ஈழத்தமிழர்களை அழிப்பதற்காக...
எங்களுக்கு பொருளாதார உதவி என்பதை விட நாங்கள் எங்களுடைய உரிமைசார் உதவியை தான் கேட்கிறோம். எனவே நாங்கள் இந்த பிரச்சினையை மட்டுமல்ல, எந்த பிரச்சினையையும் தாண்டுவதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் கேட்பது எல்லாம் எங்களது உரிமைசார் விஷயத்துக்கான முன்னுரிமையை தான். பொருளாதார பிரச்சினை என்பது எவ்வாறு ஏற்படுத்தப்பட்டது என்றால் ஈழத்தமிழர்களை அழிப்பதற்காக நடத்தப்பட்ட போருக்காக உலகநாடுகளில் பெற்ற கடன்களால் ஏற்பட்டது.
மேலும், மாறி, மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாலும் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பொதுவாக தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினை தென் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு தான் புதிய விஷயம். எங்களுக்கு இது புது விஷயமல்ல. இது இன்று, நேற்று ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை அல்ல.
வளங்கள்
இது தொடர்ந்து மாறி, மாறி வந்த ஆட்சியாலும் ஏற்பட்டது. இலங்கை அரசு ஒரு நாட்டில் கடன் வாங்கவில்லை. எல்லா நாடுகளிலும் கடன் வாங்கி வருகிறது. எத்தனை நாட்களுக்கு உலக நாடுகளால் நிவாரணம் வழங்க முடியும். இலங்கையில் என்ன வளம் இல்லை. நீர்வளம், நில வளம் என சகல வளமும் இருந்தது. இதை வீணாக்கியவர்கள் யார்? இந்த பொருளாதார பிரச்சினையில் இருந்து மீண்டு வருவது கடினமான காரியம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இது சரியாகிவிடாது. திட்டமிட்ட பொருளாதார கொள்கை இலங்கையில் இல்லை. கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். எல்லா நாடுகளும் இலங்கை மீது சில அழுத்தங்களை கொடுக்க வேண்டும். ராஜபக்சே குடும்பத்திடம் எவ்வளவு கோடி சேர்ந்து இருக்கிறது. அங்குள்ள மந்திரிகள் எல்லா வசதிகளுடன் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். வசதிகளுடனும் வாழ்கின்றனர். அப்பாவி ஏழை மக்கள் தான் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவசர கால தடை சட்டம்
இலங்கையில் அவசர கால தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. எங்களை பொருத்தவரை பயங்கரவாத தடை சட்டம் பிறப்பித்த காலத்திலும் வாழ்ந்து இருக்கிறோம். எனவே அவசர கால தடை சட்டம் என்பது வடக்கு, கிழக்கு பகுதி மக்களுக்கு புதிய விஷயம் அல்ல. தமிழர்களை அடிமைப்படுத்திய இந்த தடை சட்டம் இப்போது சிங்களர்கள் மீது பாய்கிறது.
ஐ.நா.சபையின் உதவியை இலங்கை நாடி இருக்கலாம். அவர்கள் சில நிபந்தனைகளை நிறைவேற்ற சொல்லி இருப்பார்கள். வட்டியில்லா கடனை கொடுத்து இருப்பார்கள். எங்களை பொருத்தவரை பொருளாதார பிரச்சினை பெரிய விஷயம் அல்ல. எங்களது நோக்கமானது சர்வதேச விசாரணை நடத்தி, இன அழிப்பு நிகழாது என்ற உத்தரவாதத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும். எங்களது நாட்டில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாக வாழலாம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story